Home இலங்கை வடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

வடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin
கடந்த சில நாட்களின் முன்னர், ஈழத்தில் மத முரண்பாடுகளைத் தூண்டும் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பெத்த விகாரைகளை அமைத்து தங்கியுள்ள சில பிக்குகளே வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் இரத்தம் சிந்துவதற்குக் காரணமாக இருந்த பேரினவாத மதவாத மேலாதிக்க வன்முறைவெறி, அழிவற்று, பலமாகவும் சட்டப் பாதுகாப்போடும் வன்முறைப் பசியோடும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
அண்மையில் மட்டக்களப்பு நகரில் மத – இனக் கலவரம் ஒன்று ஏற்படக்கூடிய அபாய நிலையிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தென்னிலங்கையின் இனவாத மதவாத அமைப்பான பொதுபலசேனா மட்டக்களப்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட முயற்சித்தது. பொதுபலசேனாவின் வருகை வன்முறைகளை தூண்டும் நோக்கிலேயே இடம்பெறுகிறது என்று பலரும் எச்சரிக்கப்பட்ட நிலையில் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டது.
பொதுபலசேனா வெலிகந்தைப் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு நகரில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் மட்டு எல்லையில் ஞானசாரதேரரும் நின்று குழப்பம் விளைவித்தனர். மட்டக்களப்பு நகரமெங்கும் தன் ஆதரவாளர்களுடன் திரிந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்கள்மீது இனவாத வார்த்தைகளை அள்ளி வீசினார். இலங்கைப் பொலிஸார் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் செயற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தேரரின் இனவாத வெறி வார்த்தைகளை கண்டு அங்கு நின்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பொறுமை காத்தனர். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பொலிஸாரை வலியுறுத்தினர். அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு அரச அதிபரையும் கிராம சேவையாளர் ஒருவரையும் கடுமையான இனவெறியுடன் தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைத்தளமெங்கும் பரவி அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வெலிக்கந்தையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஞானசாரதேரரும் அங்கிருந்து கடுமையாக நடந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை கொண்டு செல்ல அனுமதிப்பதாகவும் தன்னை தடுப்பதாகவும் கூறினார். எப்படியேனும் விடுதலைப் புலிகளை இழுத்து தன் மத – இனவெறி அரசியலை முன்னடுக்க அவர் முனைகிறார். மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற ஞானசாரா, பூஜை நடத்தவே செல்லுவதாகக் கூறினார்.
கடந்த மாதம் மட்டக்களப்பு பன்குடா வெளியில் தனியார் காணி ஒன்றுக்குள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நுழைந்தார். அங்கு ஒரு அரச மரம் நின்றதால் அந்தக் காணியை சிங்களவர்களுக்குரியது என்றும் அங்கு சிங்கள மக்களை குடியேற்றப்போவதாகவும் மக்களுடன் வாதம் புரிந்தார். இதற்காக தேரர் சிங்களவர்களை வெளி மாவட்டத்திலிருந்து அழைத்திருந்தார். இந்துக் குருக்கள் ஒருவருக்குச் சொந்தமான காணிக்குள் அந்தப் பிக்கு சட்டவிரோதமாக நுழைந்த போதும் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தவில்லை. பின்னர் அங்கு ஒன்று திரண்ட தமிழ் மக்களின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டார்.
கொக்கிளாயில் தனியார் காணியை விகாரைக்காக ஆக்கிரமித்துள்ள பிக்குவும் அப் பகுதியில் உள்ள மக்களை சீண்டும் விதமாய் செயற்படுவதாக கூறப்படுகிறதது. அரச மரம் இருக்கும் இடமெல்லாம் சிங்களவர்களுக்குச் சொந்தம் என்று தேரர்கள் வந்தால் ஆலமரம் இருக்கும் இடங்கள் எல்லாம் தமிழர்களுக்குச் சொந்தம் என்று புறப்படுவத?? காலம் காலமாக இலங்கையை ஆண்ட அரசுகளும் குறிப்பாக மகிந்த ஆட்சியும்  வடக்கு கிழக்கில் புத்தர்சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் எதற்காக அமைத்தனர் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கின்றன.
நல்லாட்சி அரசு என தன்னைக் கூறும் இன்றைய அரசாங்கமும் வடக்கு கிழக்கில் புத்தர்சிலைகளை நிறுவுவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்தவில்லை. கொக்கிளாய் விகாரை நல்லாட்சியில்தான் அமைக்கப்பட்டது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்தர்சிலை கட்டி விகாரை எடுக்கும் இராணுவத்தின் நடவடிக்கையும் நல்லாட்சியில்தான் நடந்தது.
நல்லாட்சியில் விகாரைகள் அமைப்பதும் தேசிய கடமையாக கருதப்படும் நிலையில் நல்லாட்சிக்கு எதிரான அரசியலும் விகாரைகள் மற்றும் புத்தர்சிலைகளினருகேதான் உருவாக்கப்படுகின்றன. ஆளும் சிங்கள தரப்பும் சரி, எதிர்தரப்பில் உள்ள சிங்களத் தரப்பும் சரி தமக்கு இடையிலான போட்டிகளுக்கு அப்பால் சிங்கள மதவாத்தை பரப்புவதிலும் மத மேலாதிக்கத்தை நிறுவுவதிலும் தமக்குள் மிக ஒற்றுமையாக உள்ளனர். வடக்கு கிழக்கில் புத்தர் சிலை வைக்கும் விடயத்தில், பௌத்த விகாரைகளை வைக்கும் விடயத்தில் மகிந்த அரசுக்கும் மைத்திரி அரசுக்கும் வேறுபாடில்லை.
தென்னிலங்கையில் உண்மையான பௌத்தர்கள் மிகவும் குறைந்த அளவானவர்களே உள்ளனர். பௌத்த மத்தின் போதனைகளை துளியேனும் பின்பற்றாத வன்முறை குணாம்சம் கொண்டவர்கள், பௌத்த மத்தத்தின் பெயரால் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்தி அவர்களின் பண்பாட்டை சிதைக்க முற்படுவதுடன் அதனை அரசியல் ஆதாயம் தேடும் ஒரு முயற்சியாகவும் மேற்கொள்ளுகின்றனர். போரில் தமிழ் மக்களை வகைதொகையற்று, மிக கொடிய முறைகளில் அழித்த இலங்கை இராணுவத்தினர் சனங்களின் சடலங்களுக்குள் புத்தர்சிலை வைத்து விகாரை எழுப்பியதும் இதன்பாற்பட்டதே. புத்தரை ஈழச் சனங்களின் குருதியில் குளிப்பாட்டிய பெருமை இலங்கை இராணுவத்தினருக்கு உண்டு.
இவை யாவும் அரசியல் நோக்கம் கருதியே  மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய அரசும் மதப் பீடங்களையும் மத வன்முறை போக்காளர்களையும் கட்டுப்படுத்தவோ, பகைக்கவோ விரும்பவில்லை. மகிந்த ராஜபக்ச இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி மாத்திரம் நாட்டைக் கைப்பற்ற நினைக்கவில்லை. அதற்கு ஈடான பாலம் கொண்ட விகாரைகளை வைத்து, வடக்கு கிழக்கில்  அமைக்கப்பட்ட விகாரைகளை வைத்து வன்முறைகளைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றலாம் என்றும் காய்களை நகர்த்துகிறார்.
வடக்கு கிழக்கில் எதற்காக விகாரைகள் அமைக்கப்பட்டனவோ, அதனையே இன்று சிங்களப் பிக்குகள் மெற்கொள்ளுகின்றனர். இன்று வடக்கு கிழக்கில் வந்து குடியேறி பௌத்த விகாரைகளை அமைத்துள்ள  பிக்குகள் வடகிழக்கின் அமைதியை, தீவின் அரசியலை, வடக்கு கிழக்கு மக்களின் இருப்பை அச்சுறுத்துபவர்களாக உள்ளனர் என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இலங்கை அரசுகளைப் பொறுத்தவரையில், தமிழர ஒடுக்க, அதிகாரத்தை தம் வசம் வைத்திருப்பதோடு, இராணுவத்துடன் பௌத்த விகாரைகளையும் தமிழ் மக்களை ஒடுக்கும் ஒரு இராணுவ ஆயுத தரப்பாகவே, அரச எந்திரமாகவே பயன்படுத்துகிறது.
ஈழத் தீவில் மாபெரும் அழிவு ஏற்பட்டதற்கும், தமிழ் மக்கள் ஒடுக்கி அழிக்கப்பட்டதற்கும், இனப்பிரச்சினை இன்னும் நீள்வதற்கும் மூல வேராக இருப்பது பௌத்த மதவாத கடும்போக்கே. குறிப்பாக பௌத்திற்கு முன்னுரிமை என்ற அரசியல் சட்டமே, சட்டத்தை மதிக்காது எதையும் செய்யோம் என்ற பேராதிக்க பெரும்பான்மை ஆதிக்க மனோநிலையை அளித்திருக்கிறது. ஈழத் தீவின் இனச் சிக்கலை தீர்க்க வேண்டுமாக இருந்தால் சிங்களப் பேரினவாத மதவாத கடும்போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். சகல சனங்களுடனும் கருணையை பகிரும் உண்மை பௌத்தத்தை சிங்கள மக்கள் பின்பற்ற வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More