குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளது. ஒரு மாத கால விசாரணைகளின் பின்னர் ஜுரிகள் சபை, இந்த சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளது. 2006ம் அண்டு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தக் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு அளவில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜூரிகள் சபையின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க இந்த சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு சந்தேக நபர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் நிறைவடைந்துள்ளன:-
Dec 23, 2016 @ 21:05
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் இன்றையதினம் நிறைவடைந்துள்ளன.
தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன . கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க,, ஜூரிகளுக்கு தெளிவுரைக்க உள்ளார்.
விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன. சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தநிலையில் வழக்கின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தொகுப்புரைகள் இடம்பெற்றன.
பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் மனைவியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது பக்க விளக்கத்தை தெளிவுப்படுத் நிகழ்த்தினார்.
1 comment
திரு. நடராஜா ரவிராஜ் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை செய்யப் பட்டமையானது, முன்பேஎதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்! கடந்த 10 வருடங்களாக இழுத்தடிப்புச் செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணைகள், கடந்த மாதத்தில் விஷேட ஜூரிகள் சபைக்குப் பாரப்படுத்தப் பட்டது! இதனூடான விசாரணை முடிவுகள் ஏமாற்றமளிப்பதாக அமையுமென அன்றே இணைய ஊடகங்களில் பேசப்பட்டது! அதுவே இன்று உண்மையாகியுள்ளது!
இலங்கையில் நடைமுறையில் உள்ள பிரித்தானியச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட நீதிவிசாரணைகள், ஒருவர் குற்றவாளியற்றவராகக் காணப்படுமிடத்து, உண்மையான குற்றவாளியைத் தேடுமவசியத்தை வலியுறுத்தவில்லை? ஆக, திரு. ரவிராஜ் படுகொலை விசாரணைக் கோப்புக்கள் இத்துடன் மூடப்பட்டுவிடும் சாத்தியமே அதிகமாகும்!
இன்னும் சொல்வதானால், அன்றைய மகிந்த ஆட்சியில் மட்டுமல்ல, இன்றைய திரு. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியிலும் கூட, நீதிமன்றங்கள் சுயமான தமது இயங்குதன்மையை இழந்தே இருக்கின்றன? குறிப்பாக எந்த ஆட்சியாளர்களுக்கும், படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்துத் தண்டனை வழங்கும் துணிவு இல்லையென்றே சொல்ல வேண்டும்?
சிறுபான்மைத் தமிழ் இனம் எதிர்பார்க்கும் போர்க் குற்ற விசாரணைகளோ அன்றித் தண்டனை வழங்கும் துணிவோ எந்தவொரு சிங்கள அரசுக்கும் இல்லை! அது மட்டுமன்றி, இன- மதவாதிகள் விரும்பாத வரையில், இனப் பிரச்சனைக்கான நியாயமானதொரு தீர்வை எந்த வொரு சிங்கள அரசும் தருமென நம்புவதும் கடினமாகவே உள்ளது!