அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் தொடர்பான தகவல்பதிவுகளை அழித்துவிட தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
கடந்த 2001 செப்டம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற நியூஜோர்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து தேசிய வருகை பதிவேடு என்னும் திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் அமுல்படுத்தியிருந்தது.
அதன்மூலம் 25 முஸ்லிம்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வந்தவர்கள் தொடர்பில் தனியேடு ஒன்று பராமரிக்கப்பட்டு அவர்கள் உன்னிப்பாக கண்காணிப்பட்டு வந்ததுடன் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் குடியேற்ற அதிகாரிகளைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டது.
எனினும் 2011-க்குப் பின்னர் முழுமையாக நீக்கப்பட்ட இந்த தேசிய வருகை பதிவேடு திட்டத்தை தீவரமாக மீண்டும் அமுல்படுத்த முடிவு செய்துள்ள ட்ரம்ப் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்கப்படும் எனவும் முஸ்லிம்களுக்கு தனி பதிவேடு பராமரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதனால் அமெரிக்காவின் மதச்சார்பின்மை பாதிக்கப்படும் என உள்ள ஜனநாயக கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம்கள் தொடர்பான பதிவேட்டை முழுமையாக அழித்துவிட ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் எதிர்வரும் ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கும் ட்ரம்ப் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களை திரட்ட முடியாது போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.