குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் கிராம மக்களுக்கென ஒதுக்கப்பட்ட 526 ஏக்கர் வயல் நிலத்தில் மிதிவெடிகள் என்று அதிகாரிகளினால் கூறப்படும் நிலையில் அடாத்தாக முப்பது ஏக்கர் வரை நிலத்தினைத் துப்பரவு செய்து நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் தனிநபர் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஜெயபுரம் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1983ம் ஆண்டில் தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட ஜெயபுரம் கிராம மக்களுக்கென தேவன்குளத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 526 ஏக்கர் வயல் நிலக் காணி போர் காலத்தில் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
2009ம் ஆண்டின் பின்னர் தேவன்குளத்தின் அணைக்கட்டில் மட்டும் மிதிவெடிகள் அகற்றப்பட்ட போதும் வயல் நிலங்களில் மிதிவெடிகள் என்பதனால் காணிப் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது.
மிதிவெடி என்று சொல்லப்பட்ட காணியில் தனிநபர் ஒருவர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக ஜெயபுரம் பொது அமைப்புகள் பூநகரிப் பிரதேச செயலர், கிளிநொச்சி மாவட்டச் செயலர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களிடமும் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வயல் காணியில் மிதிவெடி என்றால் தனிநபருக்கு எவ்வாறு மிதிவெடிகள் இல்லாமல் போனது என ஜெயபுரம் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்