தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவென எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு முன்னர் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்தே புதிய வருடம் எவ்வாறு அமையுமென தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டுமென, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான கடந்த 10ஆம் திகதி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.
அந்த வாக்குறுதிகள் என்னவென நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்துமாறு அப்போதே தான் கேட்டதாகவும் ஆனால் அவர் அதனை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் ஊடகவியலாளர் மகாநாடொன்றில் கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அரசு உடன் நிறைவேற்றவேண்டுமென குறிப்பிட்டிருந்தார். ஆனால் குறித்த வாக்குறுதிகள் என்னவென இரு தரப்பும் வெளிப்படுத்த மறுத்து வருகின்றன.
இது ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில், கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் அரசு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கியது என தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது எனவும் அரசாங்கம் அவற்றினை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.