மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும் கடல்தொழில் சார்ந்த இடங்கள் யாவும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி பகுதியை விடுவிக்கக் கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு அண்மையில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிங்கள ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த் அவர் மயிலிட்டி பகுதியில் ஆயுதக் கிடங்குகள் மற்றும் மிக முக்கிய இராணுவ நிலைகள் இருப்பதாகக் கூறியே மேற்படி அமைப்பினர் அப்பகுதியை விடுவிக்கக் கூடாது எனத் தெரிவிக்கின்றனர். இவை எல்லாம் வடக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான காலகட்டங்களிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்திய காலங்களில் இவை அப்பகுதியில் இருக்கவில்லை.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமானது கடற்றொழில் சார்ந்த வடக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனை விடுவிப்பதன் மூலம் அப்பகுதியிலிருந்து பல ஆண்டு காலமாக இடம்பெயர்ந்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வாதார பாதிப்புகளுடன் வாழ்ந்து வருகின்ற மக்களை மீளக் குடியமர்த்த இயலும் என்பதுடன், அம் மக்களின் வாழ்வாதாரங்களை மிகவும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். அத்துடன் இதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரியதொரு பங்களிப்பினையும் வழங்க முடியும்.
இதே போன்று, இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் அனைத்து நிலங்களும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே இந்த நாட்டில் நிலையான தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுக்க முடியும். தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதையே பாதுகாப்புத் தரப்பினர் அடிக்கடி உறுதிபடுத்தி வருகின்றனர். மேலும், இராணுவ ஆயுதக் கிடங்குகள் அல்லது வேறேதும் இராணுவ நிலையங்கள் இருப்பின் அவை வேறு பகுதிகளுக்கு – அதாவது பொருளாதார ரீதியில் கேந்திர இடங்கள் அல்லாத பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படல் வேண்டும். குறிப்பாக, அவிஸ்ஸாவெலை, சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதும் அதனை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் தேவை ஏற்பட்டது. எனவே, தற்போது மயிலிட்டி பகுதியில் அவ்வாறு இராணுவ முக்கிய நிலையங்கள் இருப்பின் அவற்றை அப்பகுதியிலிருந்து அகற்றிவிட்டு, அப்பகுதி உட்பட ஏனைய அனைத்து பகுதிகளையும் விடுவிக்க இந்த அரசு முன்வர வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.