காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெறுகின்றது.
தாயகப் பகுதியில் யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்டு, மற்றும் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டறியும் சங்கம், ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெறுகின்றது.
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் பொங்கலுக்கு பின்னரான காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா? வீடு தீரும்புவார்களா?, மைத்திரி ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.