காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அவர்களின் நிலையை கண்டறிவதற்கும், சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் சார்ந்து, காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளும் ஏனைய சாட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன் போது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் ஐ.நா இணைப் பங்காளியாக வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.