இலங்கையில் இருந்து சென்ற அகதித் தம்பதியை பிரித்து, தனித்தனி முகாம்களில் தங்கவைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் ஒரே முகாமில் தங்க வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இலங்கையைச் சேர்ந்த உதயகலா என்ற பெண் ஆள்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் மற்றும் அவரது கணவரை மண்டபம் அகதிகள் முகாமில் நாளை புதன்கிழமைக்குள் (ஜூலை 13) தங்கவைக்க உத்தரவிட்டதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
இலங்கையைச் சேர்ந்த டி.உதயகலா, தனது கணவர் கே.தயாபரராஜ் மற்றும் 2 குழந்தைகளுடன் இலங்கையில் இருந்து அகதியாக 2014 ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ளார்.
கடவுச்சீட்டு இல்லாமல் சென்றமைக்காக தனுஷ்கோடியில் அவர்களைக் கைது செய்த தமிழக பொலிஸார் உதயகலாவை ராமேஸ்வரம் சிறப்பு அகதிகள் முகாமிலும், தயாபரராஜை செய்யாறு அகதிகள் முகாமிலும் அடைத்தனர்.
இதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.