எதிர்வரும் முதலாம் தேதி கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த மைதானத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை கொழும்பிற்கு வந்து சேர்ந்த பின்னர் கொழும்பு ஹைட் பாக் மைதானத்தில் மாபெரும் கூட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால், அந்த மைதானத்தை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த டலஸ் அழகப்பெரும, ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தங்களது பாதயாத்திரை மற்றும் எதிர்ப்புக் கூட்டத்தை நிறுத்த முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று நிட்டம்புவ நகரில் நிறைவு பெற்றது. ஞாயிற்றுக்கிழமை அது கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.