169
முல்லைத்தீவிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர்:-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதியை அண்டி 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நில அளவை முயற்சியை மக்கள் முடியடித்துள்ளனர். மக்களின் எதிர்ப்பு காரணமாக நில அளவையை அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த காணிகளை நில அளவை செய்யவுள்ளதாக நில அளவை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது. தற்போது கடற்படையால் வேலியிடப்பட்ட பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கவே இவ்வாறு அளவை செய்யப்படவிருந்தது. இந்த செய்தி அறிந்த மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த இன்று தயாராகியிருந்தனர்.
இந்த நிலையில் வட்டுவாகல் பகுதியை முற்றுகையிட்டு மக்கள் மாபெரும் எதிர்ப்பை மேற்கொண்டனர். சுமார் 250 வரையிலான காணி உரிமையாளர்கள் கடற்படை முகாமின் முன்பாக ஒன்றுகூடியிருந்தனர். இவர்கள் தமது காணிகளை அபகரித்துள்ளமைக்கும் நரந்தரமாக சுவீகரிப்பதற்கும் எதிர்ப்பு வெளியிட்டனர்
அத்துடன் முல்லை – பரந்தன் வீதியை இடைமறித்து காணியை சுவீகரிக்கும் அளவையை நிறுத்துமாறு கோரி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக நில அளவை கைவிடப்பட்டது. இதனால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இந்தப் போராடடத்தில் மக்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நில அளவை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறும் மக்கள் கடற்படை வசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க அனைவரும் இணைந்து செயற்பட்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர்
Spread the love