இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அரசு விரும்பினால், உடனடியாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் அடையாள உண்ணாவிரத போராடத்தினை முன்னெடுத்தனர்.
இதற்கு ஆதரவளித்து அவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பலர், யாழ். மத்திய பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவோம் என்றார்கள். பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது, மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என்கின்றார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வந்தாலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்களா என்பதில் சந்தேகம் எழுக்கின்றது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவு. அதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் போராட வேண்டிய தேவை இருக்கின்றது.
நிமலரூபன் மற்றும் டில்ரூக்ஷனின் படுகொலைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் பதில் சொல்லவில்லை. இவைகளை எல்லாம் சாதாரணமாக நடைபெற்ற கொலைகள் என காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முனைகின்றது.
இனங்களுக்கு இடையிலான நல்லுறவினை அரசாங்கம் விரும்புமாக இருந்தால், அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வவுனியாவில் உள்ள வழக்கினை அநுராதபுரத்திற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்குகளை வேறு மாவட்டத்திற்கும் மாற்றுகின்றார்கள். குமாரபுரம் வழக்கு திருகோணமலையில் இருந்து அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
அதேபோன்று அரசியல் கைதிகளின் வழக்குகளும் மாற்றப்படுகின்றது.
வழக்குகளை ஏனைய மாவட்டங்களுக்கு மாற்றுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் உடனடியாக அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வழக்கு விடயங்களில் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.