குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என்ன காரணத்திற்காக முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தினார் என்பது பற்றி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ விளக்கம் அளித்துள்ளார்.
ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மஹிந்த தேர்தலை முன்கூட்டி நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு பீ.பி.ஜயசுந்தர, மஹிந்தவிற்கு அழுத்தம் கொடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் நலிவடையத் தொடங்கியதனைத் தொடர்ந்தே இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலம் பற்றி சிறந்த அறிவுடைய ஜயசுந்தர, நாடு எதிர்நோக்கவிருக்கும் நெருக்கடிகளை அறிந்து கொண்டே இந்த ஆலோசனையை மஹிந்தவிற்கு வழங்கியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை தொடர்பில் சர்வதேச பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக மஹிந்த முன்கூட்டியே தேர்தல் நடத்தினாரே தவிர, ஜோதிட ஆலோசனைக்கு அமையவல்ல என விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.