குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் 157 மில்லியன் ரூபா பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையை நடாத்திச் செல்வதற்காக முதலீடு செய்த 157.5 மில்லியன் ரூபா கறுப்புப் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்தப் பணத்தை நாமல் ராஜபக்ஸ நண்பர் ஒருவரின் ஊடாக முதலீடு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்தப் பணத்தை அரசுடமையாக்க அனுமதியளிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கடுவெல நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால குறித்த பணத்தை அரசுடமையாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தப் பணம் யோசித ராஜபக்ஸவிற்கு சொந்தமானது எனவும் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீ.எஸ்.என்னின் 157.5 மில்லியன் ரூபாய்கள், பஷிலின் நிலங்கள் அரசாங்கத்தின் வசமாகின:-
சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாக முதலிட்ட 157.5 மில்லியன் ரூபாய் நிதியை, மத்திய வங்கிக்கு மாற்ற கடுவளை நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள காணிகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய கடுவளையிலுள்ள காணியில் பொலிஸ் பயிற்சி மத்திய நிலையத்தையும், மாத்தறையிலுள்ள காணியில் சுற்றுலா பயிற்சி மத்திய நிலையத்தையும் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விமானப் படையினருக்கான எட்டு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதன்போது தெரிவித்துள்ளார்.
விமானப் படை வசமுள்ள தாக்குதல் விமானங்களிள் ஆயுட் காலம் நிறைவடைகின்றதோடு, அதனை வேகமாக பயன்படுத்த முடியாதுள்ளமையால், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.