190
குளோபல் தமிழ் விசேடசெய்தியாளர்
பாடசாலைகளில் எத்தனை மாணவர்கள் சித்திபெறுகிறார்கள்? சித்தி விகிதம் எப்படி உள்ளது என்று ஆராய்கிறோம். சித்திய எய்திய மாணவர்கள்மீதும் பாடசாலைகள்மீதும் கவனங்கள் குவிக்கின்றன. ஆனால் குடும்ப நிலமை, வறுமை, சமூகச் சிக்கல்கள் காரணமாக பாடசாலைக்கு வருகை தராத மாணவர்கள் உள்ள பாடசாலைகளும் கிராமங்களும் உள்ளன என்பதனையும் சற்று திரும்பிப் பார்ப்போம். அவைகளின் பிரச்சினைகளில் கவனத்தை குவிப்போம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகரில் அமைந்துள்ளது சிவபாதக் கலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. 1980ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் 49பேர் பெற்றோரை இழந்த நிலையில் கல்வி கற்கின்றனர். அத்துடன் 26 பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த நிலையில் கல்வி கற்கின்றனர். பெற்றோரின்றி அனாதரவடைந்துள்ள இந்த மாணவர்களின் வாழ்வு பெரும் பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடியுடனேயே நகர்கிறது.
பிரதேசத்தில் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு வருவதே பெரும் சவால் மிக்க விடயமாக இருப்பதாக பாடசாலை அதிபர் திருமதி ப.சோதிலிங்கம் கூறுகிறார். நாளொன்றில் 75 வீதமான மாணவர்களின் வரவே காணப்படுகின்றது. பாடசாலை உணவூட்டல் திட்டம் மாணவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதனால் ஓரளவு மாணவர்கள் வருகை தருகின்றனர் என்றும் காலையிலும் பாடசாலை நலன் விரும்பி ஒருவரின் ஏற்பாட்டில் உணவு வழங்கப்படுவதாகவும் அதிபர் கூறினார்.
இதேவேளை பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும் காமன்ஸ் எனப்படும் புடவை தையல் தொழில் நிலையங்களிலும் பணிபுரிவதாகவும் காலையில் ஆறுமணிக்கே அவர்கள் வேலைக்குச் சென்று மாலை இருட்டுடன் வீடு திரும்புகையில் மாணவர்களை அவர்கள் கவனத்தில் எடுக்காத சூழ்நிலை இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
சிங்கள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பாடசாலை எனப்படும் சிவபாதகலையகத்தில் இந்துபுரம், பொன்னகர், முறிகண்டி, இரணைமடு, அறிவியல் நகர் எனப் பல கிராமங்களை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட, மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களே கல்வி கற்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பாடசாலை வராத மாணவி ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி கையில் ரொட்டி சுடுவதற்கான மாவுடன் இருந்ததாகவும் காலையில் குழைத்த மாவில் மதிய உணவுத்திற்கும் ரொட்டி சுட தயாராக இருந்தார் என்றும் இவ்வாறான நிலையில் பல குடும்பங்கள் இருப்பதாகவும் இதன் காரணமாக பாடசாலையை மாணவர்கள் கைவிடுவதுடன் வரவிலும் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிடுகிறார் பாடசாலை அதிபர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடரும் சமூகத்தில் மேம்படவும் அவர்களின் எதிர்காலம் சிறக்கவும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்றும் பாடசாலை அதிபர் திருமதி ப. சோதிலிங்கம் குறிப்பிடுகிறார்.
Spread the love