குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சம்சுங்க் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப்பேசி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வகை செல்லிடப் பேசி தீடிரென தீப்பற்றிக்கொள்வதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகை செல்லிடப் பேசி தீப்பற்றிக் கொள்வது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து செல்லிடப் பேசிகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டு பதிலீடாக புதிய செல்லிடப் பேசிகளை நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்ததெனினும் இந்த புதிய செல்லிடப் பேசியும் தீப்பற்றிக் கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதனை தொடர்ந்து குறித்த செல்லிடப் பேசியை பயன்படுத்த வேண்டாம் என தமது பயனர்களடம் சம்சுங் நிறுவனம் கோரியுள்ளது.
தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சம்சுங் நிறுவனம் சுமார் 2.5 மில்லியன் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப் பேசிகளை கடந்த செப்டம்பரில் வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதிலீடாக வழங்கப்பட்ட செல்லிடப் பேசிகளிலும் இவ்வாறு தீ பற்றிக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்ற காரணத்தினால், செல்லிடப்பேசி விற்பனையை நிறுத்துமாறு உலகம் முழுவதிலும் காணப்படும் விற்பனை நிலையங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் உற்பத்தியில் தவறிழைக்கப்பட்டமை சம்சுங் நிறுவனத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதுடன் நிறுவனத்தின் மீதான மக்களின் நன்மதிப்பு வீழ்;ச்சியடையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.