149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழில். அண்மையில் நடைபெற்ற நண்பேண்டா இசை நிகழ்ச்சிக்காக பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்கப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது. யாழ்.நகர சபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை , பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , மற்றும் திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின் ஊடாக யாழ்.மாநகர சபைக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நுழைவு சீட்டு விற்பனை வரி மூலம் கிடைக்க பெற்றதாகவும் , இட வாடகையாக நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் மூலம் மூன்று நாட்களுக்கும் அதற்கான 13 வீத வரி பணமுமாக 50 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்ததாகவும் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டு விற்பனை பெறுமதியின் 7.5 வீதத்தை மாநகர சபை வரியாக அறவீடு செய்கிறது. ஆகவே வரி பணமாக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி பணமாக கிடைக்க பெற்று இருந்தால் 10 மில்லியன் ரூபாய்க்கு நுழைவு சீட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
அத்துடன் இந்நிகழ்வுக்கு பல நிறுவனங்கள் விளம்பர அனுசரணை வழங்கி இருந்தன. பிரதான விளம்பர அனுசரணையாளர்களாக , ஸ்ரீலங்கா ரெலிக்கொம் அனுசரணை வழங்கி இருந்தன.என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , யாழில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில் ,
யாழில் நடைபெறும் இசை நிகழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல நாம். ஆனால் அந்த நிகழ்வின் ஊடாக கோடிக்கணக்கான ரூபாய்க்களை வருமானமாக பெற்று செல்லாது. வடக்கு கிழக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கங்கை அமரன் , போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தாம் இலவசமாக இசை நிகழ்ச்சி நடாத்த தயார் என தெரிவித்து இருந்தார். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அங்கை அமரன் கருத்து தெரிவிக்கையில் ,
எம்.ஜி.இராமசந்திரன் முதலமைச்சாராக இருந்த கால பகுதியில் ஈழ தமிழ் மக்களுக்கு நிதி திரட்ட வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தினேன். அதற்காக பின்னாளில் இந்திய சி.பி.ஐ. விசாரணைக்கும் முகம் கொடுத்தேன் என தெரிவித்து இருந்தார்.
அந்நிலையில் இதுவரை அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் எவருமோ, நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love