குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆழ்கடலில் உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு இறுதிக்கிரியைகளை செய்வதற்கு உறவினர்கள் தயாராகியிருந்தவேளை, அவர் மூன்று நாட்களின் பின்னர் உயிருடன் திரும்பிவந்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி, மாமோதர பகுதியைச் சேர்ந்த இசான் புதா என அழைக்கப்படும் 27 வயதுடைய இசான் மஞ்சுல என்பவரே இவ்வாறு திரும்பிவந்துள்ளார். இதையடுத்து சோகத்தில் மூழ்கியிருந்த அவரது உறவினர்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர்.
குறித்த இளைஞன் உட்பட ஆறுபேர் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக காலி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்நிலையில், இவர்கள் பயணித்திருந்த கப்பல் கடந்த 8 ஆம் திகதி ஆழ்கடல் பகுதியில் மற்றுமொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதால் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இது பற்றி அம்பாந்தோட்டை, காலி ஆகிய துறைமுகங்களுக்கு ஒலிபெருக்கு சாதனம்மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. சமீர என்ற 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்திருந்தார். எனினும், உரிய தொடர்பாடல் வசதியின்மையால், ஆழ்கடலில் உயிரிழந்தவர் மஞ்சுல என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரின் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இவருக்கு கைக்குழந்தையொன்றும் இருக்கிறது. மனைவியும் பெரும் துயரில் காணப்பட்டார். கிராமமெங்கும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு, பெனர்களும் போடப்பட்டிருந்தன. சடலம் கரைக்குவரும்வரை இறுதிக்கிரியைகளுக்காக அவர்கள் காத்திருந்தனர்.
ஆனால், நேற்று கப்பல்கரையொதுங்கியபோது, உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட இசான் புதா உயிருடன் இறங்கியுவந்துள்ளார். அவர் உறவினர்களும் ஊர்மக்களும் ஆச்சர்யத்துடன் உற்றுநோக்கினர். மனைவி கட்டிணயைத்து அழுதார். ‘ ஐயோ, இறைவனுக்குதான் நன்றிசொல்ல வேண்டும். என்ன சொல்வதென்று புரியவில்லை. கனவில்கூட இனி இப்படியொரு சம்பவம் நடக்ககூடாது” என்றார் மஞ்சுலவின் மனைவி.
‘ சமீர மல்லியென்று நாங்கள் அறிவித்தோம். கரையிலிருந்தவர்களுக்கு அது மாறிவிளங்கியுள்ளது. இதனால்தான் இந்த சிக்கல்நிலை” என்றார் மஞ்சுல. அவர் உயிருடன் திரும்பிவந்ததையடுத்து கிராமத்தில் போடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகளும், பெனர்களும் அவசரஅவசரமாக கழற்றியெறியப்பட்டன.