குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நாட்டையும் மக்களையும் முதனிலைப்படுத்தி அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் சில அரசியல்வாதிகள் பாரிய திட்டங்கள் பற்றி பேசுகின்ற போதிலும், அப்பாவி மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் பாரிய திட்டங்கள் பற்றி பேசுவதாகவும், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசுவதாகவும் எனினும் மிகவும் அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்யத் திட்டமிடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்நோக்கி நகரும் காரணத்தினால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி உள்நாட்டு ரீதியாகவும் வெளிநாட்டு ரீதியாகவும் நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.