குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற இராணுவப் படையினருக்கான காணிகள் வீடுகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவன்ட் கார்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட எட்டு பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டமை அதிருப்தியை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான பிரச்சினைக்கு பாதுகாப்பு அமைச்சே பதிலளித்திருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன வழக்கு தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவு போன்றன அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படத் தொடங்கினால் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.