குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு ஜே.வி.பி கண்டனம் வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை கட்டுப்படுத்தும் அரசியல் சக்தி எது என கேள்வி எழுப்பியுள்ள அவர் இந்த விடயத்தை ஜனாதிபதி அம்பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்களின் அழுத்தங்கள் காரணமாகவே 19ம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதாகவும் இ;வ்வாறான ஓர் நிறுவனத்தை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை ஜனாதிபதி உதாசீனம் செய்யும் வகையில் கருத்து வெளியிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான நடவடிக்கைகள் மேலும் ஊழல் மோசடிகளை வலுவடையச் செய்யுமே தவிர, குறைக்காது என தெரிவித்துள்ளார்.