பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை (15) இந்தியா பயணமாகிறார். 8 வது தடவையாக நடைபெறும் இந்த BRICS மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். ஒக்டோபர் மாதம் 15 – 16 திகதிகளில் இம்மாநாடு இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது.
இந்தியா. சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC நாடுகளும் உட்பட ஆப்கானிஸ்தான் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.
எல்லாவற்றையும் உள்ளடக்கிய, கூட்டுத் தீர்வுகளை கட்டியெழுப்புதல் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாட்டில் அபிவிருத்தி வங்கி, சுகாதாரம், நிலைபேறான அபிவிருத்தி, தூய மற்றும் பசுமை மின்சக்தி ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.