குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே கொலை செய்தாக இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கேகாலைப் பகுதியில் குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கேகாலையில் அமைந்துள்ள தமது வீட்டில் இந்த உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திரகே ஜயமந்தா என்ற உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதே வேளை லசந்த கொலையுடன் தொடர்புடைய குற்றத்தின் பெரில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தரை விடுதலை செய்யுமாறு இவர் எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
இந்த உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்துகோண்டாரா? என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீ.உதலாகம என்ற உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார்.