குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
அண்மையில் கேகாலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே படுகொலை செய்ததாகத் தெரிவித்து, கடிதமொன்றையும் எழுதி வைத்து விட்டு இந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த மரணம் தொடர்பில் காவல்துறை வட்டாரத்திலும் ஏனைய தரப்புக்களிலிருந்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு கேகாலை காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவினர் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட 52 வயதான இளந்தாரிகே எதிரிசிங்க ஜயமான்ன என்ற உத்தியோகத்தர் 2007ம் ஆண்டில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஒய்வு பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் எவ்வாறு இரண்டு ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் n;தாடர்புபட்டிருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.