குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹெய்ட்டியில் நிவாரணப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மெத்யூ சூறாவளி காற்றின் தாக்கத்தினால் ஹெய்ட்டியில் சுமார் 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஹெய்ட்டிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறு நிவாரணப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நிவாரணப்பொருட்களை எடுத்துச் சென்ற ட்ரக் வண்டிகள் கொள்ளையிடப்பட்டதனை தாம் நேரில் அவதானித்ததாகவும் நிவாரணப் பொருட்கள் கிடைக்காத மக்களே இவ்வாறு பொருட்களை கொள்ளையிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ள பான் கீ மூன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் 1.4 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் கொலரா போன்ற தொற்று நோய்கள் ஹெய்ட்டியை தாக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.