குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படைவீரர் நிகழ்வு ஒன்றில், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தொடர்பில் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார். குறிப்பாக முன்னாள் கடற்படைத்தளபதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
அண்மைய மாதங்களில் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு கடுமையான விமர்சனங்களை வெளியிட்டதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்வது, இராணுவத்திற்குள் ஜனாதிபதி தொடர்பிலான நன்மதிப்பினை சிதைப்பது மற்றும் சிவில் சமூகத்தில் ஜனாதிபதி மீது கொண்டுள்ள நல்லபிப்பிராயத்தை சிதைத்தல் ஆகிய மூன்று கோணங்களில் சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புலனாய்வு அறிக்கையின் பின்னரே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கிக்கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன, இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்த வீடியோ மற்றும் தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரே ஊடகங்களுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் காரணிகளினால் ஜனாதிபதி ஆத்திரமுற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.