133
தன் அதிகாரத்தின்போது வாய்மூடி வக்கற்றவர்களாக இருந்து விட்டு மற்றவர்கள் மக்களுக்காக சாதிக்க நினைக்கும்போது சம்மந்தம் இல்லாமல் வாய் கிழிய சத்தம்போடுவதில் என்ன பலன் இருக்கிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்:
கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் முன்னெடுத்து வருகின்றேன். இதன் ஒரு கட்டமாக வௌி மாகாணங்களில் நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை நிறைவு செய்த ஆசிரியர்களை தமது சொந்த மாகாணங்களில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த வருடம் மாத்திரமல்லாமல் நாங்கள் கிழக்கின் ஆட்சியைப் பாரம் எடுத்த கடந்த வருடமும் வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களை சொந்த மாகாணங்களிலேயே நியமனம் வழங்க நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை செய்தும் காட்டினோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த நியமனங்களை இன மத மொழி வேறுபாடு கடந்து கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களையும் மையப்படுத்தியே முன்னெடுத்துள்ளேன். மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படாத போதிலும் அதற்காக கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து கடும் சவால்களை எதிர்கொண்டு எமது மாகாண ஆசிரியர்களுக்கான நியமனங்களை சொந்த மாகாணத்திலேயே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது மக்களுக்காய் இவ்வாறான சவால்களை எதிர்கொள்வது மகிழ்ச்சியளித்த போதிலும், கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகள்தான் வேதனையளிப்பனவாய் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருந்து, எமது மாகாணத்தின் கல்வி நிலைபற்றியோ அதன் குறைபாடுகள் குறித்தோ வாய் திறக்காதவர்கள் இன்று எம் மக்களுக்காய் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை விமர்சித்து வருவதையே தொழிலாக கொண்டிருக்கின்றார்கள்.
அண்மையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்றில் கிழக்கு மாகாண சபை பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார். தமது தொகுதியில் உள்ள கோட்டப் பாடசாலைகளில் எத்தனை ஆசிரியர் வெற்றிடங்கள்,என்ன குறைபாடுகள் உள்ளன என்று கூட தெரியாதவர்கள், இன்று நாம் கிழக்கின் முழுமையான கல்விக்காய் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிக்கின்றார்கள். ஆனால் இவர்களிடம் நான் சவால் விடுக்கிறேன்.
முடிந்தால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் கோட்டத்திலே எத்தனை பாடசாலைகள், எத்தனை ஆசிரியர்களின் தேவையுடனிருக்கின்றது என்று, 24 மணிநேர அவகாசத்தில் கூறமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன். ஆனால் நான் 24 விநாடியில் சகல தகவல்களையும் தருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். ஏன் என்றால் எனது தொழில் அரசியல் அல்ல என்றும் தெரிவித்தார். கிழக்கில் 5021 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாய் நேற்று என்னை தொடர்பு கொண்டு கல்வியமைச்சின் செயலாளர் உறுதியளித்த செய்தியையும் இங்கு நான் உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது மாகாணத்தின் கல்வித் துறையிலுள்ள குறைபாடுகள் குறித்து ஜனாதிபதி,பிரதமர், கல்வியமைச்சர் என அனைவருக்கும் நான் எடுத்துரைத்து என் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இது சம்மந்தமாக உரிய இடங்களில் பேச வக்கற்றிருக்கும் இவர்கள், ஊடகங்களுக்கு அறிக்கை விடுகிறார்கள். ஒருவிடயத்தை செய்து விட்டு சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் செய்து முடிக்கும் வேலையில் மூக்கை நுழைத்து அறிக்கை விட்டு நானும் கேட்டேன், பார்த்தேன், பங்குகொண்டேன் என்று உரிமை கோரும் கேவலமான அரசியல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே இத்தனை நாள் பிரதமர் மற்றும் கல்வியமைச்சருடன் பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்திருந்து ஒரு நாளாவது இது குறித்து அவர்களிடம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் கதைத்திருப்பாரா…?
ஆகவே தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தின் குறைபாடுகள் கூட தெரியாமல் எமது மாகாணத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் மாகாணங்களுக்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான சகல அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். இதன் மூலம் மாகாண பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து நன்கறிந்து, மாகாண சபைகளின் மூலம் அதற்கு ஏற்ற விதத்தில் அவற்றை நிவர்த்தி செய்து கல்வித்துறையை மேம்படுத்த முடியும் என்பதை கூறிக் கொள்கின்றேன்…. என்று தெரிவித்தார்.
Spread the love