குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
படைவீரர்களை கேடயமாகக் கொண்டு அவன்ட் கார்ட் மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரின் பெயர்களைப் பயன்படுத்தி கள்வர்களை பாதுகாக்க முயற்சிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமான முறையில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ குடும்பத்தின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இவ்வாறு பாரியளவில் மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர் எனவும், இதற்கான பொறுப்பினை ஜனாதிபதி, பிரதமர் அமைச்சரவை ஆகிய தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்பார்த்த பணிகளை ஆற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆமை வேகத்திலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.