குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஒரு பக்கத்தில் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் என்பது இரண்டு பக்கங்களிலிருந்தும் உருவாக்கப்பட வேண்டுமே தவிர ஒரு பக்கத்தில் மட்டும் இருந்து போதாது என தாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது வடக்கில் அதற்கு எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தாம் யாருக்கும் அஞ்சவில்லை என கூறுகின்றார் எனவும் அப்படியானால் அவர் யாருக்கோ அஞ்சியிருக்கின்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே அவர் இதனைக் கூறியிருப்பதாக தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலம் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பலமாக இருந்தால்தான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியிலும் அரசாங்கம் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தம்மையும் தமது குடும்பத்தினரையும் பழிவாங்குவது மட்டுமன்றி தற்போது பௌத்த பிக்குகளும் பழிவாங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.