168
வட மாகாணத்தில் தனது அமைச்சின் கீழ் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு கொள்கை ரீதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்ற போது மத்திய கணக்காய்வு திணைக்களம் அதற்கு தடையாகவும்,முட்டுக்கட்டைகளையு ம் ஏற்படுத்தி வருகின்றனர் இந்த திட்டத்திற்கு தடை ஏற்படுமாயின் நான் அமைச்சு பொறுப்பையும் துறக்கவும் தயார் என வட மாகாண மீன்பிடி,கிராம,வீதி அபிவிருத்தி அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை 21-10-2016 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு முன்னாள் போராளிகளில் முதற்கட்டமாக 44 பேருக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது
கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதற்காக எனது அமைச்சின் கீழ் வருகின்ற கிராம அபிவிருத்தி திணைக்களம் அர்ப்பணிப்போடு கடமைகளை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் மத்திய கணக்காய்வு திணைக்களத்தின் வட மாகாணத்தில் உள்ள தமிழ் கணக்காள்வாளர்கள் பாரியளவில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகின்றனர். முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதனை நிறுத்துமாற பல வழிகளில் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றனர். எமது அதிகாரிகளை நெருக்கடிகளுக்கு உள்ளாக்குகின்றனர். எனத் தெரிவித்த அமைச்சர்
இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த திட்டத்திற்கு இவர்களால் ஏதேனும் தடை ஏற்பட்டால் நான் அமைச்சு பதிவியிலிருந்து சென்றுவிடுவேன் அதற்கு தயாராகவே இருக்கின்றேன். எனவும் குறிப்பிட்ட அவர். இந்த திட்டத்தில் நிதி பயன்படுத்துவதில் ஏதேனும் மோசடிகள்,முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அதனை கணக்காய்வு செய்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கணக்காய்வுத் திணைக்களத்தின் பணி. ஆனால் எமது கொள்கையில் தலையீடு செய்ய அவர்களுக்க எந்த அதிகாரமும் இல்லை.எனவும் தெரிவித்தார்.
அத்தோடு இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மத்திய அரசின் சில அமைச்சுகளும், மற்றும் புனர்வாழ்வு அமைச்சும் செய்யவேண்டியது நீங்கள் அல்ல என கணக்காய்வுத் திணைக்களம் வலியுறுத்தி வருகிறது. யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரைக்கும் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு இவர்கள் என்ன செய்திருகின்றார்கள்? இனி எப்போது செய்ய போகின்றார்கள்? எனக் கேள்வி எழுப்பிய டெனீஸ்வரன் வட மாகாணத்தில் எமது மக்களின் நலன் கருதி என்ன செய்ய வேண்டும் என்று கொள்கை ரீதியாக நாம் தீர்மானங்களை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தும் போது அந்தக் கொள்கையில் தலையீடு செய்யும் அதிகாரம் கணக்காய்வு திணைக்களத்திற்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
Spread the love