குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ட் மேஜர், கொலை இடம்பெற்ற தினம் கேகாலையில் அமைந்துள்ள தமது வீட்டில் இருந்தார் என புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் லசந்த கொலையை தாமே மேற்கொண்டதாகக் கூறி கடிதம் எழுதி வைக்கப்பட்ட நிலையில், குறித்த ஜயமான்ன என்ற முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உதலகம என்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தருக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் தாமே இந்தக்கொலையை செய்ததாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு, குறித்த சார்ஜன்ட் மேஜர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், புலனாய்வுப் பிரிவினர் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சார்ஜன்ட் மேஜரின் செல்லிடப்பேசி சம்பவம் இடம்பெற்ற தினத்தில் கேகாலையில் செயற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த சார்ஜன்ட் மேஜர் தனது செல்லிடப்பேசியை கேகாலை பகுதியில் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட சார்ஜன்ட் மேஜரின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு பின்னர் மீளவும் கடந்த 16ம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு கைவிரல் அடையாளங்கள் பதியப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க மர்ம நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது