குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
அரசாங்கத்திற்குள் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கடுமையான அதிகாரப் போட்டி நிலைமை உருவாகியுள்ளது எனவும் கடந்த காலங்களில் இல்லாத போட்டி நிலைமை தற்போது ஏன் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் போட்டி நிலைமை நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பாரியளவு கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கவிழாது எனவும் அவ்வாறு கூறுவோரின் கட்சிகளே பிளவடையும் என ஜனாதிபதி தற்போது கூறுவது கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என இறுதி வரையில் கூறியதற்கு நிகரானது என அவர் தெரிவித்துள்ளார்.