குளோபல் தமிழ் செய்தியாளர்
ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்துக்குள் இந்த நாட்டில் நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் ஜனநாயகம் நிலைபெற வேண்டுமாயின் மாகாணம்,பிராந்தியம் ,உள்ளூராட்சி சபை போன்றவற்றுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வாதிகார முறைக்கு இடமில்லை எனக் கருதுகின்ற ஒரு ஜனாதிபதி, ஜனநாயகம் முழுமையாக இந்த நாட்டில் நிலவுவதற்கு அதிகாரம் எந்தளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண் டும் என்பதையும் உணர்ந்திருப்பார் என்றும் எதிர்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் செயற்பட்டு வரு கின்றது என்று சர்வதேசம் கருதுகின்றது. இதனால் இந்த கருமத்தில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் வெற்றிபெறுவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்ற பின்னர், அவர் சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து நாட்டினுடைய கலாசாரம், மக்கள் மத்தியில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம்,புரிந்துணர்வு, ஆகியவற்றை ஏற்படுத்தவும் உள்நாட்டின் தேசியப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காணவும் ஜனாதிபதி முறமையை ஒழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது ஜனநாயகத்திற்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது தனக்குள்ள அதிகாரங்களை தான் விட்டு செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தௌ;ளத் தெளிவாக கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் பல தலைவர்களாக இருந்தவர்கள் இவ்விதமான பல உறுதி மொழிகளை வாக்குறுதிகளை கூறியபோதும் அவை பின்னர் நிறைவேற்றப்பட வில்லை என்று தெரிவித்த இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி அதிகாரத்தை நீக்கி இந்த நாட்டின் ஒரு சர்வாதிகார ஆட்சி இருக்ககூடாது. ஒரு ஜனநாயக முறமை இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கவும் முன்வந்துள்ள அவருக்கு பாராட்டுதல்களைத் தெரிவிப்பது தம் கடமையாகும் என்றும் கூறினார்.
அவ்விதமாக மக்களினுடைய இறைமைகள் அந்தந்த மக்களின் இறைமையின் அடிப்படையில் பயன்படுத்த சந்தர்ப்பம் இருந்தால்தான் நாட்டில் ஜனநாயகம் உண்மையாக நிலவக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் நாட்டின் ஜனாதிபதி,மற்றும் பிரதமமந்திரி ஆகிய இருவரும் இந்த நாட்டின் பல பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.
ஜனாதிபதி தனது பதவிக்கால ஆட்சியில் இருந்து நீங்குகின்ற பொழுது இந்த நாடு வேறு ஒரு நாடாக மாறவேண்டும் என்று தெரிவித்த சம்பந்தன் இன்றைக்கு இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேசத்ததால் எமது நாடு மதிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி நாடுகளுக்குச்செல்லும் போது அவரை மதித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதில் தாமும் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கொள்கையளவில் பாரிய மாற்றம் ஏற்பட்டு.மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்ற கருத்து சர்வதேசத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1 comment
மக்களின் இறைமையின் அடிப்படையில் மாகாணம், பிராந்தியம் மற்றும் உள்ளூராட்சி சபைக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க, மக்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்தது என்ன?