குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான ஓர் வீடியோ தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக ஆதரவளித்தவர்களுக்கு உதவியாக தொழில் வாய்;ப்புக்களை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளிப்பது போன்று இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய சோசலிச இளைஞர் ஒன்றியத்தினால் முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது. இந்த ஒன்றியம் ஜே.வி.பி.யின் ஓர் கிளைச் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களின் கண்ணீருடன் அமைச்சர் விளையாடியிருப்பதாக ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் சுமார் 3.5 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அமைச்சர் சஜித் தனது அரசியல் சுயலாப நோக்கிற்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும், தனிப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் அதில் தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.