Home இலங்கை குடாநாட்டின் அமைதியைக் குலைத்துள்ள பல்கலை மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு – பி.மாணிக்கவாசகம்

குடாநாட்டின் அமைதியைக் குலைத்துள்ள பல்கலை மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு – பி.மாணிக்கவாசகம்

by admin

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தி கொலைச் சம்பவமானது, முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருக்கின்றது. குறிப்பாக இந்தச் சம்பவத்தில் பொலிசார் மேற்கொண்ட முன்யோசனையற்ற துப்பாக்கிப் பிரயோகம் யாழ் குடாநாட்டின் அமைதியைக் குலைத்துவிட்டிருக்கின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமைதியின்மையையும், ஆத்திரத்தையும் கிளறிவிட்டிருக்கின்றது. பொலிசார் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கும், அவர்களுடைய செயற்பாடுகளை சந்தேகக் கண்கொண்டு நோக்குவதற்கும் வழியேற்படுத்தியிருக்கின்றது.
யுத்தத்தின் பின்னரான வடமாகாணம் குழப்பகரமான நிலைமைகளில் இருந்து மீள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் குழப்ப நிலைமைக்குள் மூழ்கச் செய்வதற்கான சம்பவங்களுக்கே முகம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற அரசாங்கத்தின் பொறுப்புமிக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு உரியதாகவே இடம்பெற்று வருகின்றன.
பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், அவர்கள் மீதான பாலியல் வன்முறைகள், போரைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, வாள்வெட்டு வன்முறைகள், குழு மோதல்கள், வழிப்பறி கொள்ளைகள், திருட்டுக்கள், வீடுடைப்புச் சம்பவங்கள், இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து வீட்டாரைத் தாக்கிவிட்டு கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் என குற்றச் செயல்களின் பட்டியல்கள் அவ்வப்போது நீண்டு சென்றிருப்பதையே காண முடிகின்றது.
இந்தப் பட்டியல் நீண்டு சென்றது மட்டுமல்லாமல் வடபகுதி மக்களை அச்சத்திற்குள்ளாக்கி, அவர்களின் அமைதியையும் அவ்வப்போது குலைத்துக் கொண்டிருக்கின்றது. ச.ட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொலிசார் அவ்வப்போது குற்றவாளிகளைக் கைது செய்து குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காமலில்லை. ஆனால் பொலிசாரின் நடவடிக்கைகள் எந்தவொரு குற்றச் செயலையும் முற்று முழுதாக இல்லாமற் செய்வதற்கோ அல்லது, ஒப்பீட்டளவில் நன்றாகக் குறைந்திருக்கின்றது என்று திருப்தியடைவதற்கோ வழிவகுக்கவில்லை. இது பொறுப்புள்ளவர்களின் கவனத்திற்குரியது. கவலைக்கும் உரியதாகும்.
குழு மோதல்களாக ஆரம்பித்து, வாள்வெட்டுச் சம்பவங்களாக மாறிய வன்முறைகள் யாழ் குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன. வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் வெள்வெட்டு வன்முறையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள் தகவல்கள் வந்தவண்ணமே இருக்கின்றன.
ஆயினும் வாள்வெட்டு வன்முறைகள் குறைந்ததாகத் தெரியவில்லை. அமைதி நிலவுவதைப் போன்றதொரு மாயத் தோற்றம் காணப்படும் மீண்டும் வன்முறைகள் தலையெடுக்கும். அடாவடித்தனங்கள் அச்சமின்றி மேற்கொள்ளப்படும். வாள்வெட்டு வன்முறையாளர்களைக் கண்காணித்து கைது செய்வதற்காக களத்தில் இறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரே, மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்களான பவுண்ராஜ் என்ற விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகிய இருவரைநோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றார்கள்.
இந்தச் சம்பவத்தில் சுலக்ஷன் துப்பாக்கிச் சூட்டினாலும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கஜன், துப்பாக்கிச் சூட்டினால்,  நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் தடம் புரண்டதனால் ஏற்பட்ட விபத்து காரணமாகவும் மரணமடைந்தனர் என்று விசாரணைகளில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது.
பொலிசாரின் நியாயப்படுத்தலும், நியாயமான கேள்விகளும்
குளப்பிட்டிச் சந்தியில் மறைந்திருந்த அல்லது அந்த நள்ளிரவு நேரம் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அந்த வழியால் மோட்டார் சைக்களில் வந்தவர்கள் வாள்வெட்டுக்காரர்கள் என்ற சந்தேகத்திலேயே அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கெஸ்டன் ஸ்ரனிஸ்லாஸ் விளக்கமளித்திருக்கின்றார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிசார் உத்தரவிட்டபோது, அதனை மீறிச் சென்ற காரணத்தினாலேயே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பொலிஸ் தரப்பில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு நியாயம் கூறப்பட்டிருக்கின்றது.  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்ஷனின் மார்பில் துப்பாக்கிக் குண்டு துளைத்து முதுகு பக்கமாக வெளியேறியிருக்கின்றது.
மருத்துவ பரிசோதனை நடைமுறைக்கு அமைவாக சுலக்ஷனுடைய சடலத்தை, அவருடைய தந்தையார் விஜயகுமார், யாழ் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மயூரனிடம் அடையாளம் காட்டியிருக்கின்றார். அப்போது, சுலக்ஷனுடைய சடலத்தில் நெஞ்சு பகுதியில் துப்பாக்கிக் குண்டு புகுந்து முதுகு புறத்தில் வெளியேறியிருந்த காயத்தை சட்ட வைத்திய அதிகாரி காட்டி மரணம் ஏன் ஏற்பட்டிருந்தது என்பதைக் சுறியிருக்கின்றார்.
சுலக்ஷனின் உடலில் காணப்பட்ட வேறு காயங்களையும்கூட சட்ட வைத்திய அதிகாரி அப்போது காட்டியிருக்கின்றார். சுலக்ஷனை பொலிசார் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றனர் என்ற உண்மை இதன் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது. ஆயினும் பொலிசாரின் உத்தரவை மீறி சைக்கிளை நிறுத்தாமல் சென்ற காரணத்தினாலேயே பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்ற பொலிசாரின் கூற்று இதனால் கேள்விக்கு உரியாகியிருக்கின்றது.
உத்தரவை மீறிச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால், மோட்டார் சைக்களில் பின்னால் இருந்து பயணித்தவர் மீது அவருடைய முதுகில் அல்லவா துப்பாக்கிச் சூடு விழுந்திருக்க வேண்டும்? 
வீதியில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பொலிசாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்றிருந்தால், சிறிது தூரத்திற்கு அப்பால் இருந்த பொலிசார் உத்தரவை மீறி தங்களை நோக்கி சைக்கிள் வருவதைக் கண்டு துப்பாக்கிப் பிரயோகம் நேரடியாகச் செயதிருந்தால்தான், இவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருடைய நெஞ்சில் துப்பாக்கிச் சூடு விழுந்திருக்க முடியும். எனவே, இந்தச் சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து பல கேள்விகளுக்கு பொலிசார் சரியான பதில்களை வழங்க வேண்டிய சட்டச் சிக்கல்களில் மாட்டியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது,
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் ஒரு புறமிருக்க, வாள்வெட்டுக்கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பொலிசாருக்கு எந்தச் சட்டத்தின் கீழ் யார் அதிகாரம் வழங்கினார்கள்? எப்போது அந்த அதிகாரம் வழங்கப்பட்டது? என்ன காரணத்திற்காக வழங்கப்பட்டது? – இது போன்ற சட்டரீதியாகத் துளைக்கின்ற கேள்விகளும் பொலிசாருக்கு எதிராக, இப்போது விசுவரூபமெடுத்திருக்கின்றன.
உடனடி நடவடிக்கை 
பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்ப்பட்;ட ஒரு செயலல்ல. அது தவறுதலாக நடைபெற்ற ஒரு சம்பவம். எனவே அதனைப் பெரிது படுத்த வேண்டாம். மன்னிக்க வேண்டும் என்று பொலிசார் தரப்பில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வேண்டுகோளை மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. 
இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படுகின்ற சப் இன்ஸ்பெக்டர் சரத் திஸ்ஸ, பொலிஸ் சார்ஜன்ட் ஜெயவர்தன, கொலிஸ் கான்ஸ்டபிள்களான சந்தன, லங்காமன், பொலிஸ் சாரதி நவரத்ன ஆகிய 5 பொலிசார் உடனடியாகவே கைது செய்யப்பட்டு யாழ் மாவட்ட நீதவான் எஸ்.சதீஸ்கரனின் உத்தரவுக்கமைய நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தச் சம்பவம் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. ஆயினும் மறுநாள் காலையே இதுபற்றிய தகவல்கள் காட்டுத் தீ போல பரவியது. முதலில் விபத்து சம்பவமாகவே பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் மாணவர்களுடைய உடல்களில் ஏற்பட்டிருந்த காயங்கள், அவர்கள் பிரயாணம் செய்த மோட்டார் சைக்கிள் கிடந்த நிலைமை மற்றும் அந்த இடத்தில் மழையினால் அரைகுறையாகக் கழுவப்பட்டு காணப்பட்ட இரத்த அடையாளங்கள், சம்பவ இடத்தல் இருந்த கடையொன்றின் சிசிரிவி கமரா காட்சிகள் என்பன உண்மையில் இது ஒரு விபத்துதானா என்ற தீவிரமான சந்தேகத்தை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும், சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது.
அது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்து என காட்டி, உண்மையை மூடி மறைப்பதற்கு பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்ற ஐயப்பாடும் கூடவே எழுந்திருந்தது.
தேள் கூட்டில் கல்லெறிந்தது போன்று……..
இதனையடுத்து. இந்தச் சம்பவம் பற்றிய தவல்கள் உயரதிகாரிகளுக்குச் சென்றடைந்தன. நிகழ்வொன்றில் கலந்து கொள்தவற்காக திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேரடியாக இந்தச் சம்பவம் குறித்து எடுத்துக்கூறி, தனது கவலையை வெளியிட்டது மட்டுமல்லாமல் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விசேட பொலிஸ் குழுவொன்று முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு, சந்தேகத்திற்குரிய பொலிசாரிடம் ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உடனடியாக பணிகளில் இருந்து இடை நிறுத்தப்;பட்டனர்.
தொடர்ந்து, யாழ் மாவட்ட நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வை;க்கப்பட்டிருக்கின்றனர்.மறுபுறத்தில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை நடத்திய யாழ் மாவட்ட நீதவான் எஸ்.சதீஸ்கரன் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்ததுடன் மாணவர்களின் உடல்களையும் பார்வையிட்டார்.
அதேபோன்று சட்ட வைத்திய அதிகாரியும் மருத்துவ பரிசோதனைக்காக மாணவர்களின் உடல்களைப் பார்வையிட்டவுடன், சம்பவ இடத்திற்கும் சென்று தடயவியல் ரீதியான நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையிலேயே மாணவன் சுலக்ஷன் துப்பாக்கிச் சூட்டிலும், கஜன் விபத்து காரணமாகவும் கொல்லப்பட்டனர் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தச் சம்பவம் ஒரு கொலைச் சம்பவமே என்று தீவிரமாக சந்தேகம் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கொதித்தெழுந்து, யாழ் போதனா வைத்தியசாலயின் சவ அறையை முற்றுகையிட்டு தங்களுக்கு முன்னால் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரினர்.
மருத்துவமனைக்குச் சென்றிருந்த யாழ் மாவட்ட நீதவான் கொல்லப்பட்ட மாணவர்களின் உறவினர்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததுடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விபரம் தெரிவித்து சட்டத்திற்கு அமைவாக உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று உறுதியளித்து, மாணவர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சம்பவம் பற்றி அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வைத்தியசாலைக்குச் சென்று அமைதி காக்குமாறு மாணவர்களை சாந்தப்படுத்தினர். அதனையடுத்து, மாணவர்கள் சற்று அமைதியடைந்த போதிலும் அங்கு ஏற்பட்டிருந்த பதட்ட நிலைமை தணியவில்லை.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிப்பிரயோக சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலும், பல்கலைக்கழக மாணவர்கள் தமது விரிவுரைகளைப் புறக்கணித்து யாழ் போதனா வைத்தியசாலையில் குழுமயியிருக்கின்றனர் என்ற தகவலும், யாழ் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்த பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டு கலகம் அடக்கும் பொலிசாரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலும் யாழ் நகரில் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் வர்த்தகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது. கடைகள் பூட்டப்பட்டு நகரம் அச்சத்தில் மூழ்கியிருந்தது. எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. ஆயினும் இந்தச் சம்பவம் குறித்து அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையினர், பொது அமைப்புக்கள் என பலதரப்பட்ட தரப்புக்களில் இருந்தும் ஒரு முகமாகக் கண்டன அறிக்கைகள் வெளியாகின.
பக்கசார்பற்ற விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்களால் முன்வைக்கப்;பட்டது, மொத்தத்தில் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தி கொலைச் சம்பவமே நாடளாவிய ரீதியில் பேசு பொருளாக மாறியிருந்தது.
பின்னணி என்ன?
இந்தச் சம்பவம்  தவறுதலாக நடைபெற்ற ஒரு சாதாரண சம்பவமே என்று சில பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்புக்களில் இருந்து தெரிவிக்கப்பட்ட போதிலும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களோ அல்லது யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமோ மற்றவர்களோ அதனை ஏற்கத் தயாராக இல்லை. அந்த கருத்துக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுந்தார்கள்.
இதனை ஒரு சாதாரண சம்வமாகக் கருத முடியாது. ஏனெனில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகளான இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கி;ன்றார்கள். இது குறித்து பொறுப்பான முறையில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ள வேண்டும். உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். நாட்டில் ஏனைய இடங்களில் இடம்பெறுவது போன்றதொரு சாதாரண சம்பவமாக இதனைக் கருத முடியாது என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
முக்கியமாக அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத வேளையில் பொலிசார் இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், ஆளைக் கொல்லத்தக்க வகையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அந்த சம்பவத்தில் பொலிசாரைத் தூண்டும் வகையில் கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரும் நடந்து கொள்ளவில்லை.
கொல்லப்பட்டவர்கள் பொலிசாரினால் தேடப்பட்டவர்களல்ல. அவர்களிடம் இருந்து பொலிசாருக்கு எதிராக வன்முறை சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் வெளிப்பட்டிருக்கவும் இல்லை. இந்த நிலையிலேயே மோட்டார் சைக்களில் பயணம் செய்தவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கின்றார்கள். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்த மோதல் நிலைமைகளின்போது, அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் ஊடாக பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குரிய அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 
ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டாலே போதும். அவர்களைக் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரமும் வல்லமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று தங்களை தாக்கப் போகின்றார்கள் அல்லது தாக்க முயற்சிக்கின்றார்கள் அல்லது தங்களுடைய உத்தரவை மீற நடக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டாலும்கூட, துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அதிகாரத்தை நடைமுறையில் அவர்கள் கடைப்பிடித்துச் செயற்பட்டிருந்தார்கள். இப்போது அந்த நிலைமை இல்லை. இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்;டும்.
ஆனால், அத்தகைய வரையறையற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்த பொலிசாரும் இராணுவத்தினரும், தாங்கள் கொண்டிருந்த அந்த அதிகார பலம்சார்ந்த மன நிலையில் இருந்து முழுமையாக விடுபட்டிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் அந்த மனநிலையில் இருந்து அவர்களை சாதாரண நிலைமைக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குரிய மனம் மாற்ற நடவடிக்கைகள் – உளவியல் சார்ந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்த உளவியல் ரீதியான குறைபாடும் குளப்பிட்டிச் சந்தி கொலைச் சம்பவத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில், யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற சட்டத்திற்கு முரணான தாக்குதல்கள். துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவோ, அவ்வாறு அவர்கள் நடத்து கொண்டமை தமக்களிக்கப்பட்ட அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்ததாகவோ அல்லது அந்தச் சம்பவங்களில் அவர்கள் சட்டத்தை மீறிய நிலையில் நடந்து கொண்டார்கள் என்பதாகவோ, அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.
வேறு வகையில் கூறுவதாக இருந்தால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் ஊடாக வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், சட்டத்தை மீறிய வகையிலும், அடிப்படை மனித உரிமைகளை மீறிய வகையிலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய வகையிலும் நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கும் வகையில் தெரிவிக்கப்படவில்லை.
யுத்தத்திற்குப் பின்னரான இன்றைய நிலைமைக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய மனங்களில் செயற்பாடுகளில் முறையான மாற்றங்கள் எற்படுத்தப்படவில்லை என்பது முக்கியமாகும்.குறிப்பாக மனித உரிமை மீறல்; அல்லது சட்ட மீறல்களில் ஈடுபட்ட பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்ற மனநிலையும் செயற்பாடுகளுமே இன்று நாட்டில் மேலோங்கியிருக்கின்றது. இதனை அண்மையில் ஜனாதிபதியும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள். யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெருமைக்குரியவர்களாக மேல் நிலையில் வைத்து நோக்கப்பட வேண்டும். நடத்தப்பட வேண்டும் என்ற மனநிலைப் போக்கு ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றது. வெற்றிவாத நிலையில் வைத்து அவர்கள் கணிக்கப்படுகின்றார்கள். இதனால் தாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்ற மன நிலையிலேயே அவர்கள் காணப்படுகின்றார்கள். அத்தகைய அணுகு முறையிலேயே பலரும் இப்போதும் நடந்து கொள்கின்றார்கள்.
இந்த வெற்றிவாத ஊக்குவிப்பு மனநிலைப் போக்கும் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தி கொலைச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமுண்டு.எது எப்படியானாலும், இந்தச் சம்பவம் குறித்து திறந்த மனதுடன் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தை, விசேட தேசிய முக்கியத்துவம் மிக்க சம்பவமாகக் கவனத்திற்கொண்டு துரிதமாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கையே சட்டம் ஒழங்கிற்கும் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பான பொலிசார் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கையூட்டத்தக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் போகுமானால், அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கான முயற்சிகளும்கூட விழலுக்கு இறைத்த நீராகிப் போகவும் கூடும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More