குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை நியாயாமானதல்ல என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வடக்கில் போராட்டங்கள் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கமும் காவல்துறையினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சந்தேகமின்றி ஓர் குற்றச் செயலாகும் எனவும், மனித உரிமை செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். நியாயமான காரணிகளின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான எந்தவொரு காரணமும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வடக்கின் சிலர் கருதுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு இளைஞர்கள் காவல்துறையினர் பற்றி பிழையான அபிப்பிராயத்தை கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.