குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வாகனத்தை நிறுத்தாமல் சென்றாலும் அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையினருக்கு அதிகாரம் கிடையாது என தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். ஏதேனும் ஓர் வாகனம் காவல்துறையினரின் உத்தரவினை மீறி பயணம் செய்தாலும் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அதிகாரம் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் அடுத்த காவல்துறைச் சோதனைச் சாவடிக்கு அறிவிப்பது அல்லது பின்தொடர்ந்து சென்று அவர்களை கைது செய்வதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும் குற்றமாகும் என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு கோரினால் அதற்கு செவிசாய்த்து வாகனத்தை நிறுத்த வேண்டியது அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.