யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்:
கடந்த 20-10-2016 வியாழன் நள்ளிரவு காங்கேசன்துறை வீதியால் பயணித்துக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் ஸ்ரீலங்கா காவல்து றையினரால் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு காரணமாக பலியான சம்பவம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் இதற்கு தமது வன்மையான கண்டனத்தையும் பதிவுசெய்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய காவல்துறையினர் அப்பாவி மாணவர்கள் மீது நடாத்திய துப்பாக்கிச்சூடு எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். இச்சம்பவமானது இம்மாணவர்களின் குடும்பங்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளதோடு சக மாணவர்களிடையே கொந்தளிப்பு நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால போர்ச்சூழலால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் இந்நாட்களில்கடந்த காலத்தை நினைவுபடுத்தி நிற்கும் இச்செயற்பாடானது எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.
இந்நிகழ்வுடன் தொடர்புபட்டதாகக் கருதப்படும் ஐந்து பொலிஸாரின் கைது நடவடிக்கையை வரவேற்பதுடன்; நீதி விசாரணைகள் நேர்மையான முறையில் நடாத்தப்பட்டு குற்றவாளிகளிற்கு துரிதமாக தண்டனை வழங்கப்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக பின்வருவனவற்றை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது:
- எதிர்காலத்தில் காவல்துறையினர் துப்பாக்கிகளை மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் கையாள்வதுடன் மீண்டும் இத்தகைய துயரச்சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
- தவறுகளையும் குற்றங்களையும் மூடிமறைக்க முற்படாது அவற்றை ஏற்றுக்கொண்டு குற்றமிழைத்தவர்களுக்கான தண்டணை நீதி விசாரனையின் அடிப்படையில் தாமதமின்றி வழங்கப்படல் வேண்டும்.
3) இச்சம்பவத்தின் காரணமாக பொதுமக்களைக் காக்கும் தமது கடமையில் எந்தவித பின்னடைவும் ஏற்பட காவல்துறையினர் இடமளிக்கக்கூடாது. சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் தமது கடமையை காவல்துறையினர் தொடர்ந்தும் பொறுப்புடன் ஆற்றவேண்டும்.