237
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர் விசாரணைகளாக நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை புளியங்குளம் எனும் இடத்தில் துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும், இரும்பு கம்பிகள் பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 22 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ், மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா, ஜீவகன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ் மற்றும் நமசிவாயம் கருணாகர மூர்த்தி ஆகிய நால்வர் கைது செய்யபட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. 47 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கபட்டு குற்றப் பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்நிலையில் பிணையில் விடுவிக்கபட்டு இருந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ், மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா, ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்கள். ஏனைய இரு சந்தேக நபர்களும் வழக்கு விசாரணைகளுக்கு சமூகம் அளித்து வந்தனர். அதனால் முதலாம், இரண்டாம் எதிரிகள் அற்ற நிலையில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் உடன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
அந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாக சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் மன்றில் ஆஜராகவில்லை. மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர். அதன் போது மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி எம்.ரெமிடியஸ் ஆஜராகி இருந்தார். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந் ஆஜராகி இருந்தார்.
எதிரிகள் தம் மீதான 47 குற்ற சாட்டுக்களையும் மறுத்தனர். அத்துடன் தமக்கு ஜூரி சபை தேவையில்லை எனவும் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை நடாத்துமாறும் கூறி இருந்தனர். அதனை அடுத்து மன்றில் ஆஜராகாத முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு பகிரங்க பிடிவிறாந்து மேல் நீதிபதி பிறப்பித்தார். அத்துடன் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவியை நாடுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்
அத்துடன் குறித்த வழக்கு விசாரணையை தொடர் தினங்களில் நடாத்த உள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ம் திகதி வரை தொடர் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அத்தினங்களில் குறித்த சம்பவத்தின் 40 சாட்சியங்களும் மன்றில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு இட்டார்.
Spread the love