குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சந்தேக நபராவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நெப்போலியன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் குறித்த நபர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது இருந்து வந்துள்ளார். குறித்த நபருக்கே புதன் கிழமை மேல் நீதிமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டு உள்ளது.