Home இந்தியா நடிகர் சிவகுமாரின் கவனத்தை ஈர்த்துள்ள 50 ஆண்டு டயரிக் குறிப்பு

நடிகர் சிவகுமாரின் கவனத்தை ஈர்த்துள்ள 50 ஆண்டு டயரிக் குறிப்பு

by admin

நாள் தவறாமல் டைரி எழுதும் பழக்கம் உள்ள சிவகுமார், தான் நடிக்க வந்த 1965-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையிலான இந்த 50 ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒரு சம்பவத்தை தன் டைரியில் இருந்து புரட்டித்தருகிறார்.

1965, ஜூன் 19: ஏவி.எம்-ன் ‘காக்கும் கரங்கள்’ வெளியீடு. இன்று மாலை 4.50 மணி அளவில், தமிழகம் எங்கும் என்னைத் திரையில் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 6’x5.5’ அளவு அறையில் 7 ஆண்டு தங்கி ஓவியம் படித்த ஓர் இளைஞன் நடிகனாக, உலகுக்கு அறிமுகம் ஆகிறான்.

1966, அக்டோபர் 6: அறிஞர் அண்ணா தலைமையில் என் நாடகம். திரு.சீனி.சோமு என்ற விளம்பர டிசைனர் எழுதி இயக்கிய நாடகம் ‘அடல்ட்ஸ் ஒன்லி’. அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றம். அண்ணா தலைமை. மேஜர் சுந்தர்ராஜன், சோ, கல்யாண்குமார், வெண்ணிற ஆடைமூர்த்தி… நாடகம் பார்த்துப் பாராட்டினர்.

1967, ஜனவரி 12: கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துவரும் எம்.ஜி.ஆர் அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் சுடப்பட்டார்.

1968 செப்டம்பர் 2: ‘அம்மன் தாலி’ நாடக அரங்கேற்றம். ‘நாடகத்தில் நடிப்பைப் பயின்றாலொழிய திரையுலகில் கால் ஊன்ற முடியாது’ என சுகி சுப்ரமணியம் அவர்களின் புதல்வர் எம்.எஸ்.பெருமாள் கல்கியில் எழுதியிருந்த குறுநாவலை நாடகமாக்கி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் இன்று அரங்கேற்றம் செய்தேன்.

1969, அக்டோபர் 19: விகடன் தீபாவளி மலருக்காக ‘நட்சத்திர சமையல்’ நிகழ்ச்சி. திருமதி.சௌகார் ஜானகி வீட்டில் நடைபெற்ற இதில் முத்துராமன்-வி.கோபால கிருஷ்ணனுடன் நானும் கலந்துகொண்டேன். நடிகைகள் ராஜஸ்ரீ, கிருஷ்ணகுமாரி, ஷீலா, சிவகாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1970, டிசம்பர் 8: சொந்த வீடு வாங்கினேன். 1958 ஜூனில் சென்னை வந்து 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, இரண்டு ஆண்டுகள் திரையுலகில் குருவிபோல் சேர்த்து 40 ஆயிரம் ரூபாயில், மூன்றாயிரம் சதுர அடியில் தி.நகரில் இப்போது குடியிருக்கும் எண்.17, கிருஷ்ணா தெரு வீட்டை விலைக்கு வாங்கினேன்.

1971, மார்ச் 6: ‘அம்மன் தாலி’ நாடக பொன்விழா. இரண்டரை ஆண்டுகள் சென்னை உள்ளிட்ட தமிழக முக்கிய நகரங்களுக்கு சிவா டூரிஸ்ட் பஸ்ஸில் நாடகக் கலைஞர்கள், உபகரணங்களுடன் சென்று நாடகங்கள் நடத்தி, இன்று ஏ.பி.என் அவர்கள் தலைமையில் ஜெமினி, நாகேஷ் போன்றோர் கலந்துகொள்ள என்.கே.டி கலா மண்டபத்தில் நடைபெற்றது.

1972, ஜனவரி, 31: பருந்துப் பார்வையில் பம்பாய் ஓவியம். என்.எஸ்.என் தியேட்டரில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் குழுவுடன் பம்பாய் சென்று, கிங் சர்க்கிளில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் தங்கி, நாடகங்களில் நடித்துவிட்டு – இன்று 2:30-க்கு தொடங்கி 6:15-க்குள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தின் 25-வது மாடியில் இருந்து, பம்பாயின் அழகை பென்சில் ஸ்கெட்ச் செய்தேன்.

1973, மே, 18: பாண்டிச்சேரியில் ‘சொந்தம்’ நாடகம். பாண்டியில் இருந்து கான்ட்ராக்டர் பஸ் அனுப்பாததால் நாடகக் குழுவினர் திண்டிவனம் – மரக்காணம் -சூணாம்பேடு வழி செல்லும் ரூட் பஸ்ஸில் பாண்டி சென்று நாடகம் நடத்திவிட்டு, அரசு பஸ்ஸில் மேஜரும் நானும் சென்னை திரும்பினோம்.

1974, ஜூலை 1: சிவகுமார் – லட்சுமி திருமணம். கோவை, அவினாசி-புளியம்பட்டி சாலையில் தண்டுக்காரன் பாளையத்தில் 5,000 பேர் அமர்வதற்கு ஏற்ப வேலு மணியம்மாள் பந்தல் போட்டுத்தர, சென்னையில் இருந்து விசேஷ ரயில் பெட்டியில் மேஜர் நாடகக் குழு, பத்திரிகையாளர்கள் இரவே வந்து இறங்க, ஜாம் ஜாம் என்று திருமணம். உச்சிமோந்து ஆசி கூறவேண்டிய தாயார், காலில் அடிபட்டு தனியாக கிராமத்தில் இருந்தார்.

1975, ஜூலை 23: ஆண் குழந்தை பிறந்தது. மயிலாப்பூர் கல்யாணி நர்சிங்ஹோமில் இன்று அதிகாலை 2:51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார். (அந்த ‘சரவணன்’தான் இன்று சூர்யா!)

1976, அக்டோபர் 11: பம்பாய் விமான விபத்து. இன்று இரவு பம்பாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்த சில நொடிகளில் தீப்பற்றி கீழே விழுந்ததில், அதில் பயணம் செய்த 95 பேரும் எரிந்து சாம்பல் ஆயினர். என் ‘பத்ரகாளி’ பட கதாநாயகி ராணிச்சந்திராவும், அவரது தாயார் மற்றும் மூன்று சகோதரிகளும் தீக்கு இரையானார்கள்.

1977, நவம்பர் 14: நாகையைத் தாக்கியது புயல். இன்று வங்கக் கடலில் இருந்து வீசிய புயல் நாகப்பட்டினம், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரைப் பறித்துவிட்டது. தயாராருடன் கோட்டைக்குச் சென்று புயல் நிவாரண நிதியாக ரூ.10,000-க்கான செக்கை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கொடுத்தேன்.

1978, அக்டோபர் 10: சிறைக் கைதிகளுக்கு உணவு. நாடு சுதந்திரம் அடைந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூரும் வகையில், சிறை அதிகாரி பகவதி முருகன் அவர்கள் முன்னிலையில் சிறையில் அடைபட்டு இருக்கும் சகோதரர்களுக்கு (2,700 பேர்) உணவு வழங்கினேன்.

1979, மே 26: 100-வது பட விழா. 14 வயதுவரை 14 திரைப்படங்களே பார்த்த சிறுவன் கதாநாயகனாகி 14 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்து முடித்தேன். முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயம் கொடுத்து என் தாயார் ஆசியுடன் ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யைத் தொடங்கிவைத்தார்.

1980, செப்டம்பர் 25: கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் இறுதிப் பயணம். 1934-ல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி ‘நந்தனார்’ படத்தில் நடித்தவர். ‘ஒளவையார்’ படத்தில் நடிக்க 4 லட்சம் பெற்றவர். 64 வயதில் ‘காரைக்கால் அம்மையாராக’ நடித்து எனக்காக ஒரு பாடல் பாடியவர். கொடுமுடி கோகிலம் கே.பி.எஸ் விடைபெற்றுக் கொண்டார்.

1981, அக்டோபர் 16: ஊட்டியில் இருந்து முத்துராமன் உடல் சென்னைக்கு. ‘ஆயிரம் முத்தங்கள்’ படப்பிடிப்புக்கு வந்த முத்துராமன் கால்ஃப் காட்டேஜில் இருந்து பிராணவாயு குறைவாக இருந்த மூடு பனியில் ‘ஜாக்கிங்’ செய்யப்போய், மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். ஐ.ஜி.பரமகுரு அவர்கள் உதவியுடன் ஊட்டி மருத்துவமனை வேனில் உடலை வைத்து, 12 மணி நேரம் பயணம் செய்து, அதிகாலை 3 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

1982, மார்ச் 12: இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் 27-வது மாநாடு நுவராலியாவில் நடைபெற்றது. ஜனாதிபதி ஜெயவர்த்தனே கலந்துகொண்டார். அமைச்சர் தொண்டைமான் அவர்கள் ஏற்பாட்டில் திருமதி மனோரமாவுடன் நானும் சென்று, வாலி அவர்கள் எழுதிய ‘இந்தியா டுடே’ நாடகத்தின் ஒரு பகுதியில் நான் பாரதி, மனோரமா கண்ணம்மாவாக 15,000 பேர் முன்னிலையில் நடித்தோம்.

1983, நவம்பர் 20: டாக்டர் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு. பாரதிராஜா, பஞ்சு அருணாசலம், பாக்யராஜ் ஏற்பாட்டில், டாக்டர் பட்டம் பெற்ற எம்.ஜி.ஆருக்கு நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. சிவாஜி சிறப்புப் பேச்சாளர்.

1984 பிப்ரவரி 24: தலைக்கு மேலே விமானம். கோவை பீளமேடு விமான நிலைய ரன்வேயில் நான் கார் சவாரி செய்ய, தலைக்கு மேலே கிளைடர் விமானத்தில் ராதிகா பறந்து வருவதுபோல ‘நிலவு சுடுவதில்லை’ படத்தின் ‘பாரிஜாதம் பகலில் பூத்ததோ’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிறுவயதில், தலைக்குமேலே 100 அடி உயரத்தில் கிராமத்தில் போர் விமானங்கள் பறந்தபோது, செடிக்குள் பதுங்கியது நினைவுக்கு வந்தது.

1985 பிப்ரவரி 4: அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர் வந்தார். பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெற, அள்ளி எடுத்து வேனில் ஏற்றி அமெரிக்க புரூக்லின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர், சிகிச்சை முடிந்து துள்ளி நடந்துவந்து கோடிக்கணக்கான இதயங்களில் பால் வார்த்தார்.

1986 ஜூலை 1: மதுரையில் ‘சிந்து பைரவி’ 200-வது நாள் விழா. இந்தப் படத்தில் பங்குபெற்ற பலருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. படைப்பாளி பாலசந்தருக்கும் கொடுத்திருக்க வேண்டும். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்ந்த ஒரு காட்டுவாசி இளைஞனை, ஜே.கே.பி. என்ற கர்நாடக சங்கீத வித்வானாக நடிக்கவைத்த கே.பி சாருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

1987 அக்டோபர் 4: ‘இது ராஜபாட்டை அல்ல’ நூல் வெளியீடு. நான் ஜூனியர் விகடனில் 45 வாரங்கள் தொடராக எழுதிய தமிழ்த் திரைப்பட வரலாறு, வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. அகிலனின் தவப்புதல்வன் கண்ணன், ‘தமிழ் புத்தகாலயம் மூலம் முதல் நூலாகக் கொண்டுவந்தார்.

1988 நவம்பர் 15: கலைஞர் வருகை. பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் என்றும் தமிழ் மக்களால் மறக்கமுடியாத அரசியல் தலைவர், தமிழைக் கொண்டாடுபவர், நினைவாற்றல் மிக்கவர், தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோருடன் எங்கள் இல்லம் வந்து 90 மணித்துளிகள் என் ஓவியங்களை ரசித்துப் பார்த்தார்.

1989 அக்டோர் 25: அன்னையார் இறைவனடி சேர்ந்தார். என்னை ஈன்றெடுத்து, வறுமை தெரியாமல் வளர்த்து, என் விருப்பப்படி ஓவியக்கலை படிக்கவைத்து, நடிகனாக 25 ஆண்டுகள் பார்த்து உச்சிமோந்த அந்த தெய்வம் இறைவனடி சேர்ந்தது. முதல்வர் கலைஞர், சிவாஜி, ராஜ்குமார் தொடங்கி பலதுறை பெருமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

1990, அக்டோபர் 27: ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் 60-ம் ஆண்டு மணிவிழா. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தொகுத்து வைத்திருக்கும் நடமாடும் என்சைக்ளோபீடியா ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலைவாணர் அரங்கில் மணிவிழா.

1991 ஜூன் 14: 1974-ல் தீவிபத்தில் காலமான நடிகர் சசிகுமார் 10 வயது தாண்டாத 2 குழந்தைகளை விட்டுச் சென்றார். அவர்களின் படிப்புக்கு திரையுலக முக்கிய புள்ளிகள் உதவினோம். இன்று வளர்ந்துவிட்ட அவர் மகள் துர்கேஷ் நந்தினி-சுப்ரமணியம் திருமணம் பெசன்ட் நகரில். குழந்தைகளை வாழ்த்திவிட்டு 30 ஆண்டுகளாக மவுனவிரதம் இருக்கும் சசிகுமாரின் தந்தை பேராசிரியரிடம் ஆசிபெற்றேன்.

1992 அக்டோபர் 4: சிட்னியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு. எண்மோர் தியேட்டரில் வசந்தமாலை நிகழ்ச்சி. ‘தாகம் நாட்டிய நாடகம்’, சிட்னி ஈழத்தமிழர் கழக கலைக்குழு நிகழ்ச்சி. ‘நான் கண்ட திரையுலகம்’ பற்றி கடைசியில் 1 மணி நேரம் பேசினேன்.

1993 அக்டோர் 8: ‘மேஸ்ட்ரோ’ இளையராஜாவுக்குப் பாராட்டு. 1813-ல் துவக்கப்பட்டு 180 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு பல மேதைகளின் சிம்பொனியை வாசித்துள்ளது. ஜான் ஸ்காட் கண்டக்டராக இருந்து இளையராஜாவின் சிம்பொனியை ஒலிப்பதிவு செய்தார். காமராஜர் அரங்கில் சிவாஜி தலைமையில் இன்று பாராட்டு விழா.

1994 ஜூன் 22: எல்.வி.பிரசாத் மறைவு. ஆந்திராவில் பிறந்து, பம்பாய் ஸ்டுடியோ வாட்ச்மேனாக வாழ்க்கையைத் தொடங்கி, இந்தியாவின் முதல் பேசும் படம் ‘ஆலம் ஆரா’வில் தலைகாட்டி 15 ஆண்டு அனுபவத்துடன் சென்னை வந்து ‘கிருகப்பிரவேசம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து, டைரக்ட் செய்து, ‘சம்சாரம்’, ‘சௌகார்’, ‘கல்யாணம் பண்ணிப்பார்’, ‘மனோகரா’, ‘மங்கையர் திலகம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘இதயக் கமலம்’ இயக்கி தென்இந்தியாவின் மிகப் பெரிய படைப்பாளியாக விளங்கிய எல்.வி.பிரசாத், 86 வயதில் விடை பெற்றார்.

1995 ஜூலை 31: இலங்கை ஈடன் ஓட்டலில் படப்பிடிப்பு. ராதிகா உடன் நடித்த ‘மீண்டும் மீண்டும் நான்’, தொலைக்காட்சி தொடர். மனோபாலா இயக்கம். கொழும்பில் இருந்து தெற்கே 60 கி.மீ தூரத்தில் களுதறை தாண்டி காலி ரோட்டில் பேருவலையை அடுத்து வருகிறது ஈடன் ஓட்டல். ரிசப்ஷன் லாபியின் அழகு ஒன்று போதும் அந்த ஓட்டல் பெருமை சொல்ல.

1996 ஜூலை 20: வாலியின் அவதார புருஷன் வெளியீடு. கவியரசு கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் கப்பல் விட்டுக்கொண்டிருந்த திரைக்கடலில், படகு விட்ட வாலி, அவர்களைவிட அதிக ஆண்டு வாழ்ந்து அதிக பாடல்கள் எழுதியவர். இது, கம்பராமாயணத்தைப் படித்து கம்பன் வார்த்தைகளைப் பயன்படுத்தாத உரை நடைக் கவிதை நூல்.

1997 ஜூலை 15: சிவாஜிக்கு பால்கே விருது. இந்தியாவின் பெருமைக்கு உரிய திரைப்பட விருதான பால்கே விருதினை இன்று மாலை குடியரசுத் தலைவரிடம் உலகின் ஒப்பற்ற நடிகர்களில் முதன்மையான சிவாஜி பெற்று, அந்த விருதுக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 6: ‘நேருக்கு நேர்’ படத்தில் சூர்யா அறிமுகம்.

1998 மார்ச் 27: ‘காதலுக்கு மரியாதை’ 100-வது நாள் விழா. ‘உயிருக்குயிராகக் காதலித்தவர்கள் பெற்றோருக்காக தங்கள் காதலைத் தியாகம் செய்ய – பின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற ஜோடி தேடி, தோற்று, மீண்டும் காதலர்களை இணைத்துவைக்கும் ஃபாசிலின் அற்புதப் படம்.

1999 ஜூலை 1: 25-வது ஆண்டு திருமண நாள். எதிர்காலத்தில் தாடி வளர்த்து ஏதாவது கோயில் மடங்களில் சாமியாராக முடங்கிக் கிடப்பேன் என்று நம்பினேன். ஆனால் என்னைச் சகித்துக்கொண்டு, என் விருப்பப்படியே என்னை வாழவிட்டு, என்னோடு 25 ஆண்டுகள் வாழ்ந்த பெண்மணியைப் பார்த்து மலைக்கிறேன்.

2000 ஜூலை 31: கன்னட ராஜ்குமார் கடத்தப்பட்டார். எங்கள் இளையமகன் கார்த்தி நியூயார்க்கை அடுத்த பிங்காம்டன் பல்கலையில் படிக்க இன்று இரவு அமெரிக்கா பயணமானான். இதே இரவு தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் தாளவாடியை அடுத்த கஞ்சனூர் பண்ணை வீட்டில் இருந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

2001 மே 29: ‘பூவெல்லாம் உன் வாசம்’ கடைசி நாள் படப்பிடிப்பு. 36 ஆண்டுகள் பெரிய திரையில் நடித்து பொறுமையின் சிகரமான தமிழ் மக்களை என் நடிப்பின் மூலம் சோதித்தது போதும் என, இன்றுடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவுசெய்தேன்.

2002 ஜனவரி 4: அண்ணாமலை தொடர் படப்பிடிப்பு. அம்பாசமுத்திரத்தை அடுத்து உள்ள கைலாசநாதர் கோயிலில் படப்பிடிப்பு. லண்டன் நண்பர் உமாகாந்தன் கொண்டுவந்த பென்டாக்ஸ் காமிராவால், கைலாசநாதர் கோயிலை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன்.

2003 நவம்பர் 9: வெள்ளி விழா நாயகன் சத்யராஜுக்கு பாராட்டு. 25 ஆண்டுகள் திரையுலகில் பவனிவந்த சத்யராஜுக்கு அவருடைய நண்பர்கள், கோவை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பாராட்டு விழா. கமல்ஹாசன், விஜயகாந்த், மணிவண்ணன், வடிவேலு, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாருடன் நானும் கோவை சென்று வாழ்த்தினேன்.

2004 ஜூன் 18: இசைக்குயில் எம்.எஸ்.ஸுடன் சந்திப்பு. தெய்வீகக் குரல் அரசி ‘சேவாசதனம்’ படத்தில் கே.சுப்ரமணியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, ‘சகுந்தலை’, ‘மீரா’ படங்களில் தன் இனிய குரலால் தமிழ் மக்களை வசீகரித்த எம்.எஸ் அம்மாவின் பாதம் தொட்டு வணங்க, என் மகள் பிருந்தாவை அழைத்துச் சென்றேன். ‘சாதகம் செய்துகொண்டே இரு. பயிற்சிதான் குரு’ என்றார்.

2005 ஜூன் 30: இளையராஜா சிம்பொனியில் திருவாசகம். 100 ஆண்டுகளுக்கு முன் ஜி.யு.போப், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இப்போது இளையராஜா திருவாசகத்தை ‘அரேபோரியோ’ முறையில் உருவாக்கியுள்ளார். ஆஸ்கர், கிராமி விழாக்களில் வாசிப்பவர்கள் இளையராஜாவுடன் கைகோத்துச் செய்தனர். வைகோவின் உரை உச்சம்.

2006 செப்டம்பர் 11: கலைஞர் தலைமையில் சூர்யா-ஜோதிகா திருமணம். ‘பராசக்தி’ வசனகர்த்தாவாக என் இதயங்களில் இடம்பிடித்தவர் 5-வது முறை தமிழக முதல்வராகி மணமக்களை வாழ்த்த வந்தார். உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைய தலைமுறையினர், அவரவர் நாட்டில் உள்ள தெய்வீகத் தலங்களுக்குச் சென்று, இந்த ஜோடி வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்த அன்பை, இணையதளத்தில் பார்த்து மலைத்தேன்.

2007 டிசம்பர் 29: எம்.ஆர்.ராதா 100-வது ஆண்டு விழா. தி.க-வில் உறுப்பினராகாமல், பெரியாரை ஒப்பற்ற தலைவராகவும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வாழ்வின் வேதமாகவும் ஏற்றுக்கொண்டு, நாடகத்தின் மூலம் பல எதிர்ப்புகளை, தடைச் சட்டங்களைத் தாண்டி, அந்தச் சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டுசேர்த்தவர். ‘ஒழுங்கா ஓவியம் படித்து உருப்படற வழியைப் பாரு. கூத்தாடி வேலைக்கு வராதே’ என்று எனக்கு அறிவுரை செய்தவர். பிப்ரவரி 23: ‘பருத்தி வீரன்’ வெளியீடு. கார்த்தி அறிமுகம்.

2008 செப்டம்பர் 19: பாட்டி பேச்சியம்மாள் (108) இயற்கை எய்தினார். குடியிருந்த வீட்டை தானே பெருக்கி, சானமிட்டு திண்ணை மெழுகி, கைத்தடி பிடிக்காமல் கொல்லைப்புறம் சென்று குவளையில் தண்ணீர் மொண்டு ஊற்றி, புடலை கொடியை முளைக்கவைத்து, மூக்குக் கண்ணாடியின் துணை இன்றி அரிசியில் கல் பொறுக்கி, மருந்து, மாத்திரை, ஊசி நெருங்கவிடாமல் 108 வயது வாழந்த பாட்டி பேச்சியம்மாள், சூர்யா – ஜோதிகாவை வாழ்த்தி 2 ஆண்டு கழித்து விண்ணுலகம் பயணமானார்.

2009 ஜனவரி 28: 100 பாடல்களில் கம்பராமாயண உரை. ஈரோடு தண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப் பளியில் புத்தகக் காட்சியில் கம்பராமாயணத்தில் 100 பாடல்களை எடுத்துக்கொண்டு நிகழ்த்திய உரை எனக்கு, மேடைப் பேச்சாளன் என்ற அங்கீகாரத்தை அளித்தது.

2010 செப்டம்பர் 21: டாக்டர் கலாம் சந்திப்பு. சன் டி.வி-க்கு விசேஷப் பேட்டி எடுக்க டெல்லி சென்று டாக்டர் கலாம் அவர்களைச் சந்தித்தேன். பேட்டி எடுக்கும்போது என் குடும்பத்தையும் குழந்தைகளையும் வாழ்த்தி என் ஓவியங்களையும், ‘கம்பன் என் காதலன்’ உரையையும் நெகிழ்வுடன் பாராட்டினார்.

2011 ஜூலை 8: முதல்வர் ஜெயலலிதா என் இல்லம் வருகை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் நடித்த சக கலைஞரை மதிக்கும் வகையில் முதல்வர் ஜெ. வீடு வந்து கார்த்தி-ரஞ்ஜினியை மனமார வாழ்த்திச் சென்றார்.

2012 ஜூலை 12: சூர்யாவின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி கடைசி நாள். பிறந்தது முதல் 30 வருஷமாகப் பேசிய வார்த்தைகளைவிட, 100 மடங்கு பேசி, மௌன சாமியார் வாயாடியாகவும் தன்னைக் காட்டிக்கொள்ள முடியும் என்று சூர்யா நிரூபித்த நிகழ்ச்சி.

2013 ஜனவரி 11: கார்த்தி-ரஞ்சனிக்கு மகள் பிறந்தாள். வெள்ளைச் சேலை-வியர்வை-வெயிலில் பாடுபட்டு கருத்துப்போன உடம்பு… இப்படித்தான் என் தாயாரை நான் பார்த்திருக்கிறேன். கணவன் விட்டுப்போன குழந்தைகளைக் காப்பாற்ற, காட்டில் அலைந்தே அவர் வாழ்க்கை கழிந்துவிட்டது. கார்த்தியின் மகள் உமையாள் வடிவில் என் தாய் பிறந்து பாசத்தைப் பொழிகிறாள்.

2014 ஜூலை 24: 80 வயது ஜே.கே., 91 வயது கோபுலு பாராட்டு விழா. கார்ட்டூன், கேரிகேச்சர், தாண்டி புராண, சரித்திர கால மன்னர்கள், மக்கள், இக்கால மக்களின் நடை, உடை, பாவனைகளை கோபுலு அளவுக்கு ஓவியம் தீட்டியவர்கள் தமிழகத்தில் இல்லை. ஜெயகாந்தன் போல விளிம்பு நிலை மனிதர்களின் எளிய, கொடிய வாழ்க்கையை தன் பேனா மூலம் இலக்கியமாக்கிய எழுத்தாளரும் இல்லை. அன்று கௌரவிக்கப்பட்ட விகடன் பாலன், ஜெயகாந்தன், கோபுலு மூவருமே இன்று இல்லை!

நன்றி  விகடன்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More