தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்றுமதி செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழங்காலச் சிலைகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை இந்திய மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் மீட்டுள்ளதுடன் இது தொடர்பாக மூன்று பேரை கைதுசெய்துள்ளனர்.
வளசரவாக்கம், தியாகராஜ நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் தொல்லியல் துறையின் போலியான சான்றிதழ்களோடு ஏற்றுமதி செய்யவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீடுகள் பாலாஜி மற்றும் ஸ்ரீகாந்த் ஓம்கா ராம் ஆகியோருக்குச் சொந்தமானவை. இது தொடர்பாக, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புதுதில்லியைச் சேர்ந்த உதித் ஜெயின் என்பவரது உதவியுடன் போலியான சான்றிதழ்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தவை என்பது தெரியவந்தது.
இதே போன்ற சிலை கடத்தல் தொடர்பாக, கடந்த ஜூன் மாதத்தில் கைதுசெய்யப்பட்ட தீனதயாளன் என்பவருக்காகவே, இவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் இந்திய மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் இதுதொடர்பில் பாலாஜி, ஸ்ரீகாந்த் ஓம்காராம் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன் எனவும் இதில் பாலாஜி என்பவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் என்பதுடன் ஸ்ரீகாந்த் ஓம்காராம், தீனதயாளனின் உறவினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலிச் சான்றிதழ்களைப் பெற இவர்களுக்கு உதவிய உதித் ஜெயின் மும்பையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் சென்னையிலும், மும்பையிலும் மேற்கொண்டதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.