தமிழக அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்தாலும் பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யாமல், அமைச்சரவை முடிவின்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நவம்பர் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்ததாகவும் அவ்வாறு அமல்படுத்த தவறினால், தற்போது வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரிசி விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30-க்கு பதில், ரூ.22.54-க்கே வழங்க முடியும் எனக் கூறியதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீடு குறையாமல் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளதாகவும் இதன் அடிப் படையில், நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் (ஒக்டோபர் 24ஆம் திகதி) சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் போது, தற்போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாலும், தற்போதுள்ள பொது விநியோகத் திட்டத்தை தொடர்வதாலும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 193 கோடியே 30 லட்சம் மேலதிக செலவு ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தல் பேரில், மக்கள் நலன் கருதி செயல்படுத்தப் படுகிறது. இது அனைவருக் கும் உணவு பாதுகாப்பை வழங்கும் சிறப்பான திட்டமாக அமையும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னுரிமை குடும்பங்களுக்கு மட்டுமே அரிசி என்று சட்டம் வலியுறுத்திய போதும், முன்னுரிமை மற்றும் அல்லாத குடும்பங்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என முதல் வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.