Home இலங்கை மனிதாபிமானத்தின் எழுச்சியும்திசை திருப்பும் முயற்சியும் -செல்வரட்னம் சிறிதரன்

மனிதாபிமானத்தின் எழுச்சியும்திசை திருப்பும் முயற்சியும் -செல்வரட்னம் சிறிதரன்

by admin
Question New_CI
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அநீதியான முறையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷனும், கஜனும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாகத்தான் இந்தப் படுகொலையைப் பலரும் கண்டித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இன, மத, அந்தஸ்து, பிரதேச பேதமின்றி நாடெங்கிலும் மாணவர் சமூகம் கிளர்ந்தெழுந்து நீதி கோரி குரல் எழுப்பியிருக்கின்றது. அநீதிக்கு எதிரான இந்த ஆவேசம் வரவேற்கத்தக்கது. ஊக்குவிக்கப்பட வேண்டியதாகும்.
இப்போதுதான் முதன் முறையாக இத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுவதற்கில்லை. தர்ம ஆவேசத்துடனான இந்த சமூக எழுச்சி மூன்றாவது தடவையாக இப்போது கிளர்ந்து எழுந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயது நிறைந்த வித்யா சிவலோகநாதன் என்ற பாடாசலை மாணவி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கோரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் வடமாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.
இதேபோன்று நாட்டின் தென் பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் கொட்டதெனியாவ என்ற இடத்தில் சேயா சதேமி என்ற 4 வயதேயான பாலகி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
புங்குடுதீவு மாணவி வித்யாமீதான கொடுமை கடந்த வருடம் மே மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. சிறுமி சேயா மீதான வன்கொடுமை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி இழைக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களும் வடக்கு தெற்கு, தமிழ், சிங்களம் என்ற பேதமின்றி நாட்டு மக்களின் மனச்சாட்சியைக் கீறி கோரமான முறையில் காயப்படுத்தியிருந்தன. இதன் காரணமாகவே,, அந்த சம்பவங்களைக் கண்டித்து நாடெங்கிலும் மக்கள் கொதித்தெழுந்து நீதி கோரி போராட்டங்களில் அப்போது ஈடுபட்டிருந்தனர்.
சிறுமிகளும் பெண்களும் நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவலாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள். இந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் நாட்டு மக்களின் கண்களுக்குத் தெரிய வருவதில்லை.
இருப்பினும் அவ்வப்போது சில சில சம்பவங்கள் தொடர்பிலான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளாக வெளிவந்து பலரையும் பதைகளிக்கச் செய்திருக்கின்றது.
மாணவி வித்யா மற்றும் சிறுமி சேயா ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை மிருகத்தனத்தையும் மிஞ்சியிருந்தது. அதன் காரணமாகவே அந்த அநியாயங்களை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பொறுத்துக்கொள்ள முடியாமற் போனது. ஆயினும் பொதுவாக சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டதாகக் கூற முடியாது.
மனதாபிமானத்தின் எழுச்சி
இதன் காரணமாகவே, வித்யா மற்றும் சேயா ஆகியோரை முதன்மைப்படுத்தி, சிறுமியர் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், அவர்களை இம்சிப்பவர்களுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி, இனமத, பிரதேச பேதமின்றி நாடெங்கிலும் சமூகம் பொங்கி எழுந்திருந்தது.
பாலியல் வன்முறைகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் குரல் ஓங்கி ஒலித்திருந்தது. குற்றவாளிகள் உடனடியாக இனம் காணப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒரே குரலில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த சமூக எழுச்சி அத்துடன் நின்றுவிடவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக மக்கள் பரவலாகக் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தியிருந்தனர். மலையகம் மட்டுமல்லாமல், நாட்டின் வடக்கு தெற்கு கொழும்பு என பல இடங்களிலும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களும், அவர்களுக்கு ஆதரவான போராட்டங்களும் முழு நாட்டையும் அதிரச் செய்திருந்தது. ஆயினும், அந்தப் போராட்டம் ஓய்வதற்கு முன்னதாக வடக்கே யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மீண்டும் ஓர் அதிர்வலையை நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருக்கின்றது. மீண்டும் ஒரு தடவை சமூகம் அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கின்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது சகாக்களின் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன, மத, மொழி பேதமின்றி ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழகங்கள் தோறும் அடையாளப் போராட்டம் நடத்தியிருந்தார்கள்.
தலைநகர் கொழும்பில் இடதுசாரி அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களைச் சேர்;ந்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து யாழ் பல்லைக்கழக மாணவர்கள் இருவரினதும் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். அநீதி இழைக்கப்படுவதை எவரும் விரும்புவதில்லை என்ற பொதுவான மனித இயல்பை இந்த சமூக எழுச்சி பிரதிபலித்திருக்கின்றது.
வெறும் அரசியல் நோக்கத்திற்காகவும், சுய அரசியல் இலாபத்திற்காகவும் நடத்தப்படுகின்ற போலியான போராட்டங்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. வடக்கிலும் தெற்கிலும் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்களில் நீதிக்காகக் குரல் கொடுக்கின்ற மனிதமும், மனிதாபிமானமும் மிகவும் தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றது.
திசை திருப்பல்கள்
ஆயினும் இந்த எழுச்சியைத் திசை திருப்புவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றனவோ என்ற ஐயப்பாடும் எழத்தான் செய்கின்றது. அவசரகாலச் சட்டமோ அல்லது இரவு நேர ஊரடங்குச் சட்டமோ நடைமுறையில் இல்லாத ஒரு சூழலில், சட்டம் ஒழுங்கு என்பன நிலைநாட்டப்பட்டு அமைதி உறுதி செய்யப்பட்டிருக்கின்ற நிலைமையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது,
இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில், பொலிசாரின் வீதிச் சோதனைச் சாவடியோ அல்லது பொலிசாரின் காவல் நிலையோ அல்லது பொலிஸ் நிலையமோ இருக்கவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.நள்ளிரவு நேரம் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெற்றிராதபோது, பொலிசார் திடீரென தோன்றி மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு உத்தரவிடுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு பொலிசார் நடந்து கொள்வதற்குரிய தேவை இருப்பின், வீதியில் வருகின்ற வாகனத்தில் உள்ளவர்களுக்கு பொலிசார் கடமையில் இருக்கின்றார்கள் என்பது முன்னெச்சரிக்கை மூலம் உணர்த்தப்பட்டதன் பின்னரே வாகனத்தை நிறுத்துவதற்கு அவர்கள் சமிக்ஞை செய்ய வேண்டும்.
இந்த நடைமுறைகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பின்பற்றப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு பின்பற்றப்பட்டிருந்தால், அந்த மாணவர்கள் அநியாயமாகப் பலியாகியிருக்க மாட்டார்கள். அப்பாவிகளான இரு இளைஞர்களின் படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய தகவல்களின் மூலம் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்தான் என தெரிந்து, அவர்களைப் பழி வாங்க வேண்டும் அல்லது அவர்களைத்தான் கொலை செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் செயலாகக் கருத முடியவில்லை. மாறாக, போராட்ட குணம் கொண்டவர்கள்தானே என்ற மனப்பாங்கோடு, வடக்கில் உள்ளவர்கள் – யாழ் பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்;ட ஒரு துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலாகவே தோன்றுகின்றது.
இது ஒரு புறமிருக்க, பொலிசார் கூறுவது போன்று இந்தத் துப்பாக்கிப்பிரயோகச் சம்பவம் தற்செயலாக நடைபெற்ற சம்பவமாகவே இருந்தாலும்கூட, அதனை மூடி மறைப்பதற்கு அவர்கள் எத்தனித்திருக்க வேண்டியதில்லை.
குற்றச் செயல் ஒன்று இடம்பெற்றுவிட்டது என்பதை அங்கு கடமையில் இருந்த பொலிசார் என்ற ரீதியில் சம்பந்தப்பட்;டவர்களும், அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். உளமார முதலில் அவர்கள் தங்களுக்குள் அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்தில் அதுவும் பிரதான வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒருவரைக் கொன்று விட்டு, மற்றவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பின்னரும், அந்தக் குற்றத்தை இலகுவாக மூடி மறைத்துவிடலாம் எனக் கருதி, பொலிசார் செயற்பட்டிருப்பதையே காண முடிகின்றது. பொலிசார் நினைத்தால் யாழ்ப்பாணத்தில் எதையும் செய்துவிட்டு தப்பிச் சென்று விடலாம் என்ற மனப்போக்கு காரணமாகவே, அந்தச் சம்பவத்தை ஒரு வாகன விபத்தாகக் காட்டி திசை திருப்புவதற்குப் பொலிசார் முயற்சித்திருந்தார்கள் என்று கருதுவதில் தவறிருக்க முடியாது.
இந்தச் சூட்டுச் சம்பவத்தை ஒரு விபத்துச் சம்பவமாகக் காட்ட முனைந்தது மட்டுமல்லாமல், இரண்டு மாணவர்களுமே கொலை செய்யப்பட்டிருந்தார்கன் என்ற நிலைமை வெளிப்பட்டிருந்த நிலையில், கொல்லப்பட்ட இளைஞர்களின் பெற்றோரிடம் தேவையான எல்லாவற்றையும் செய்து தருகின்றோம். உயிருடன் உள்ள உங்களுடைய ஏனைய பிள்ளைகளுக்குத் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றோம். எங்களை மன்னித்துவிடுங்கள் இந்தச் சம்பவத்தைப் பெரிது படுத்த வேண்டாம் என்று பொலிசார் நேரடியாக பேரம் பேசியிருப்பதுவும் நடைபெற்ற குற்றச் செயலில் இருந்து தப்பிக்கொள்வதற்கும், அந்தச் செயலை மூடி மறைப்பதற்குமான திசை திருப்பலாகவே நோக்க வேண்டியிருக்கின்றது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொதுமக்களின் பாதுகாப்புக்காகச் செயற்படுகின்ற பொலிசார் என்ற ரீதியில் நடந்துவிட்ட சம்பவத்திற்கு பாதிக்கப்பட்டவர்களிடம் உண்மையாகவே மன்னிப்பு கேட்பதென்றால், அதனை முறைப்படி செய்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறில்லாமல், பாதிக்கப்பட்டவர்களை, தங்களுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டுவி;ட்டார்களே என்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னர், தரதரவென இழுத்துச் சென்று சலுகைகளைச் செய்வதாக  அவர்களிடம் உறுதியளித்து பின்னர், மன்னிப்பு கேட்கப்பட்டிருப்பதுதான் இந்த சம்பவத்தைத் திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியோ என சந்தேகிக்கச் செய்திருக்கின்றது.
பொலிசார் மீதான தாக்குதலும் திசை திருப்பலுக்கான முயற்சியும் 
இது ஒரு புறமிருக்க, கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில் கொல்லப்பட்ட மாணவர்களில் நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் கிளிநொச்சி பாரதிபுரத்தில் நடைபெற்ற வேளை, மற்றவராகிய பவுண்ராஜ்  என்றழைக்கப்பட்ட விஜயகுமார் சுலக்சனின் உடல் சுன்னாகம் கந்தோரடையில் அவருடைய இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த  போது, சுன்னாகம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு குழுவினர் அங்கு சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்த தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிசார் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
கொள்ளை முயற்சியோ ஏதோ அசம்பாவிதம் நiபெறுகின்றது என்பதை அறிந்த இரண்டு பொலிசாரும் அந்தக் குழுவினரைப் பிடிப்பதற்கு முயன்ற போதே, அவர்களை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பி தலைமறைவாகியிருந்தனர். இந்த சம்பவத்தில் பொலிசார் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகின்றது என்பதை அறியாமலேயே வாள் வெட்டு நடத்தியவர்கள் தாக்கியிருக்க வேண்டும். ஏனெனில் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என்றும் விசேட கடமைக்காகவே யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், அவர்கள் சாதாரண மக்களைப் போன்ற சிவில் உடையிலேயே இருந்தார்கள். இந்த நிலையில் அவர்களை பொலிசார் என்று சாதாரணமாக எவரும் அடையாளம் காண முடியாது. ஆனால், இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரியுள்ள ஆவா குழுவினர், சுலக்சன் மற்றும் கஜன் ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்களையும் துப்பாக்கிப்பிரயோகம் செய்து கொலை செய்த பொலிசார் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டதாக உரிமை கோரியிருக்கின்றனர்.
உண்மையிலேயே பொலிசார் மீது வாள்வெட்டு நடத்தியவர்கள்தான் ஆவா குழுவினர் என்ற பெயரில் இந்த உரிமை கோரல் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது.ஏனெனில் அந்தத் துண்டுப் பிரசுரம் வெறுமனே வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோருகின்ற தெளிவான உரிமை கோரலாகக் காணப்படவில்லை. மாறாக ஏதேதோ குறிப்பிட்டு, சுற்றி வளைத்துத்தான் வாள்வெட்டுக்கு உரிமை கோரப்பட்டிருக்கின்றது.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மாணவர்களுக்காக பொலிசார் மீது நடத்தப்பட்ட பழிவாங்கல் தாக்குதல் சம்பவமாக, சுன்னாகத்தில் பொலிசார் மீது நடத்தப்பட்ட சம்பவத்தைத் திசை திருப்புவதற்கு இந்த உரிமை கோரல் மூலம் முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோருவதற்காக ஏற்பட்டுள்ள எழுச்சியையும் திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கின்றது.
வடபகுதியிலும்சரி கிழக்கிலும்சரி நீதிக்கு விரோதமாக பொதுமக்களைப் பாதித்து, அவர்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்குகின்ற சம்பவங்கள் அல்லது பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது, அவற்றில் இருந்து பொதுமக்களினதும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கவனத்தைத் திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.அந்த வகையிலேயே பொலிசார் மீது நடத்தப்பட்ட சுன்னாகம் வாள்வெட்டுச்சம்பவமும் மறைமுகமான ஒரு சக்தியினால் கையாளப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
நம்பகமான விசாரணை 
இத்தகைய ஒரு நிலைமையிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் தமது சகாக்களின் மரணங்களுக்கு உடனடியாக நீதியான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என கோரியிருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படத்தக்க வைகயில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  வகையில்  யாழ்பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களிலும் கல்விச் செயற்பாடுகள் இடம்பெற மாட்டாது என்றும் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.
கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிசாரும் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருக்கின்றார்கள். விசேட புலனாய்வு பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள். பக்க சார்பற்ற முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கமைவாக இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையிலேயே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் நிபந்தனைகளை முன்வைத்து விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். நீதி விசாரணைகளில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சந்தேகம் காரணமாகவே அவர்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
நாடளாவிய ரீதியில் நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. குறற்வாளிகளுக்கு எதிரான நீதி விசாரணை நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன என்று பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள்.
அதேவேளை, தெற்கே கம்பஹா மாவட்டம் கொட்டதெனியவில் இடம்பெற்ற சிறுமி சேயா மீதான பாலியல் வன்முறைக் கொலைச் சம்பவம் துரிதமாக விசாரணை செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நீதி வழங்குவதில் வடக்கில் ஒரு நடைமுறையும் தெற்கில் ஒரு நடைமுறையும் கைக்கொள்ளப்படுகின்றதா என்றும் அவர்கள் வினா எழுப்பியிருக்கின்றார்கள்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச்சமன் என்ற காரணத்தினாலேயே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது சகாக்களின் மரணத்திற்கு துரித விசாரணை வேண்டும் என கோரியிருக்கின்றார்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதி வழங்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகின்றது.
பொலிசாரே குற்றம் செய்திருக்கின்றார்கள் என்று கருதப்படுகின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுவிடும் என்ற அச்சம் பொதுவாகவே காணப்படுகின்றது.
பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இருக்க வேண்டிய நெருக்கமான சிவில் நிர்வாகம் சம்பந்தமான உறவு சீர்குலைந்துள்ள நிலையில் இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது பொலிசாரினதும் அரசாங்கத்தினதும் தலையாய கடமையாகும்.
திசை திருப்புகின்ற நடவடிக்கைகள் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறுவதில் இருந்து தப்பிச் செல்கின்ற கலாசாரத்தைத் தொடர்ந்து பேணுவதற்காகவோ மறைமுக சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அத்தகைய நடவடிக்கைகளை முறியடித்து நீதியை நிலைநாட்டுவதற்கு பொலிசார் தீவிரமாகச் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
நீதி நிலைநிறுத்தப்படாது போனால் பொலிசார் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்தவர்களாக, அவர்களிடமிருந்து அந்நியப்பட்டவர்களாக, சட்டம் ஒழுங்கு செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியாதவர்களாக நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More