நாடாளுமன்றம் தொடர்பான அதி முக்கிய ஆவணங்களைத் திருடி, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு விற்றதாக சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சவுத்ரி முனாவரின் தனி உதவியாளரான ஃபர்ஹாத்கான் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மண்டிஹவுஸ் மெட்ரோ புகையிரத நிலையத்தில் மாதந்தோறும் ஃபர்ஹாத்கான் என்பவரை சந்தித்து, உளவுத் தகவல்களைப் பெற்றுவந்ததாக அக்தர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததையடுத்து குறித்த நபரை தீவிரமாக கண்காணித்த டெல்லி காவல்துறையினர் கடந்த வெள்ளிக் கிழமை இரவு அவரை கைது செய்ததுடன் 10 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், நாடாளு மன்ற அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் இதர முக்கிய ஆவணங்கள் போன்றவற்றைத் திருடி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.க்கு விற்பதே இவரின் பிரதான பணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளாகவே, நாடாளுமன்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஐஎஸ்ஐ.க்கு கான் விற்றுவந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து தெரிய வந்ததும் ஃபர்ஹாத் கானை உடனடியாக பணியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் எனவும் கானின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய சவுத்ரி, உளவு வேலையில் தனக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.