முதலமைச்சர் உரை
குருர் ப்ரம்மா…….
அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாண அமைச்சர்களே, மாகாண சபை உறுப்பினர்களே, உயரதிகாரிகளே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!
மற்றுமொரு மரநடுகை மாதம் மாண்புடன் மலர்ந்துள்ளது. மழைதரும் மாதமான இந்தக் கார்த்திகை மாதத்தில் இவ்வருடம் எமது இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மரநடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 2014ம் ஆண்டு கார்த்திகை மாதந் தொடக்கம் வருடந்தோறும் இம் மாதத்தில் இந்தப் புனித கைங்கரியத்தில் நாம் ஈடுபட்டுவருகின்றோம்.
இவ்வருட ஆண்டுக்குரிய கருப் பொருள் ‘சொந்த மண் சொந்த மரங்கள்’ என்பதாகும். இந் நாட்டிற்கே மட்டும் சொந்தமான மரங்கள் பல உண்டு. பிற நாடுகளில் இருந்து கொண்டுவந்து நட்டு இங்கு விருத்தி அடைந்து வந்துள்ள மரங்களும் உள்ளன. அவற்றை விட இங்கு பாரம்பரியமாக விருத்தியடைந்து வந்துள்ள ஆனால் பிற நாடுகளிலும் அவ்வாறே வளரும் மரங்களும் உள்ளன. இவ்வருடம் இந் நாட்டின் மண்ணுக்கே சொந்தமான மரங்களை நடுவோம் என்ற அடிப்படையில் அவற்றை அடையாளம் கண்டு மாகாணம் பூராகவும் நடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இவ்வாறான எமது பாரம்பரிய தருக்களே எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்க வைத்திருப்பவை. அவற்றை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நடுவதால் நாம் எமது பாரம்பரியத்தை வலியுறுத்துகின்றோம். வரலாற்றை வளம்படுத்துகின்றோம். எமது வாழ்விடங்களில் செழுமையான அடையாளச் சின்னங்களை வாரி வழங்கி விருத்தியடைய வைத்து எமது நிலங்களை வளம் பெறக் காக்கின்றோம்.
நடுகை செய்தால் மட்டும் போதாது. நட்ட மரங்களைத் தொடர்ச்சியாகப் பராமரித்து வரவேண்டும். மரங்களை ஓங்கி வளரச் செய்ய வேண்டும். எமது மண்ணின் பசுமையைப் பாதுகாக்க முன்னிற்க வேண்டும். இதனால்த்தான் நாங்கள் இப்புனித கைங்கரியத்தில் பாடசாலைகள், கூட்டுறவு அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், வணக்கஸ்தலங்கள், இளைஞர் அமைப்புக்கள் என்று பலரின் உதவியையும் இணைத்துள்ளோம். பொதுமக்களின் பங்குபற்றலை விசேடமாகக் கோரியுள்ளோம்.
மரங்களை நாம் ஏன் நட வேண்டும்?
எமது வகுப்பறைகளில் கூறியவை ஞாபகம் வருகின்றன. பிராணவாயுவை எமக்குத் தந்து கரியமில வாயுவை தம்முள் உள்ளடக்குகின்றன மரங்கள் என்று படித்துள்ளோம். ஆகவே எமது உயிர் நாடியாகிய பிராணவாயுவை வெளிக் கொண்டு வருவதால் எமக்கு அவசியம் தேவையானவையே மரங்கள் என்றாகின்றன. அதனோடு சம்பந்தப்பட்ட சில விடயங்களையும் இங்கு குறிப்பிடலாம். மரங்கள் பல வளர்ந்திருந்தால் சுற்றுப் புற மாசடைதல் குறைவடைந்திருக்கும். ஆஸ்மா போன்ற சுவாசத்தோடு தொடர்புடைய நோய்கள் கட்டுப்படுத்தபட்டிருப்பன.
அடுத்து பாலர்களாக எமக்குக் கற்க வைக்கப்பட காரணம் ஒன்றுண்டு. அதுதான் மரங்கள் நிழல் தருவன என்பது. இந் நாட்டில் குறைவான மழை பெறும் இடங்களில் ஒன்றாகும் வடமாகாணம். இந்த மாகாணத்தில் நிழல் தரும் மரங்கள் பல வளர்ந்து வருவது அத்தியாவசியமாகின்றது. அதுவும் இராணுவத்தினரால் பாதுகாப்பு என்ற சாட்டில் மரங்கள் பல வெட்டித் தறித்த இந்தப் பிரதேசத்தில் மரங்கள் இருந்தால்த்தான் வனாந்தரம் போல் எமது மாகாணம் வருங்காலத்தில் ஆகாது காத்திட அவை உதவுவன. சீதோஷண நிலையைத் தீவிரமாக்காது தடுத்து மிதமாக வைத்திருக்க மரங்கள் உதவுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் தன்மை வாய்ந்தவை மரங்கள். மிருக வகைகள், பறவை வகைகள், ஜந்துக்கள் போன்றவற்றிற்கு வாழிடமாகவும் பாதுகாப்பாகவும் அமைவன மரங்களே.
அதுமட்டுமல்ல தொடர் ஓசைகளால் சூழலில் ஏற்படும் ஓசை மாசடைவைக் கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்குண்டு. பேய்க் காற்றின் உத்வேகத்தைக் கட்டுப்படுத்தவல்லவையும் மரங்களே. நிலத்தின் பால் கவனத்தைச் செலுத்தினோமானால் நீரினால் தரணி அரிக்கப்படுதலைத் தடுத்து நிறுத்துபவை தருக்களே. நில அரிப்பைக் கட்டுப்படுத்துகின்றன மரங்கள். எமது தேவைக்குகந்த பல பொருட்களை மரங்களில் இருந்துதான் பெறுகின்றோம். மருந்துக்கள், பானங்கள், பழம் போன்ற உணவுகளைத் தருகின்றன மரங்கள். தேன் கிடைப்பதும் மரங்களிலேயே. விறகு கிடைப்பதும் அவற்றில் இருந்தே. தளபாடங்கள் ஆக்குவதும் அவற்றில் இருந்தே.
சூழலைப் பொறுத்த வரையில் சூழலைப் பாதுகாப்பதுடன் அருவிகளையும், நீர் நிலைகளையும் சீருடன் சிறந்து விளங்க வைக்க மரங்களே காரணமாக உள்ளன. இன்னும் சிந்தித்தோமானால் எமது நடைமுறை வாழ்க்கையில் மரங்கள் வகிக்கும் முக்கியத்துவம் எம் எல்லோருக்கும் புரியும். குழந்தைகள் ஏறிப் பழகுவது மரங்களில். ஊஞ்சல் அமைத்து விளையாடுவது மரங்களில். ஓடியாடி, ஒளித்து விளையாடுவது மரத்தைச் சுற்றியே. மிருகங்கள், பறவைகள், ஜந்துக்கள் வாழ்க்கையை ஊன்றிக் கவனிக்கவும் அவற்றைப் பாதுகாத்துவரவும் மரங்கள் உறுதுணையாக உள்ளன. அடுத்த வீட்டுக்காரன் ஆகாத கிருமிநாசினிகளை அகல வீசும் போது அவற்றை எங்கள் தோட்டத்தில் பரவாமல் பாதுகாப்பதும் மரங்களே.
மரங்களை நாம் வளர்ப்பதால் அவை எமக்குரியன, எம்மவை என்ற எண்ணத்தை வளர்க்கின்றன.
அண்மையில் எனது கொழும்பு வீட்டின் தோட்டத்தில் இருக்கும் ஒரு செவ்விளநீர் மரத்தை வெட்டிச் சாய்த்து வாகனத்தரிப்பிடம் ஒன்றை அவ்விடத்தில் அமைக்க வேண்டும் என்ற கருத்து வெளியிடப்பட்டது. அப்பொழுது அவ்வாறு செய்யாது எம்மைத் தடுத்தது என்னவென்றால் அந்த மரத்தை நாட்டியது என் மனைவியின் தம்பியார் என்பதே. அவர் இறக்க முன் ஆசையாக வைத்த அந்த செவ்விளைநீர் மரம் அவர் ஞாபகர்த்தமாக இருக்க வேண்டும் என்றவுடன் வாகனத்தரிப்பிடம் கட்ட வேற்று மார்க்கங்கள் கண்டறியப்பட்டன.
மரங்கள் நாம் பிறந்த போது எம் வீட்டுத் தோட்டங்களில் இருந்தன. நாம் இவ்வுலகில் இருந்து விடைபெறும் போதும் அவற்றை விட்டு வைத்துச் செல்லவிருக்கின்றோம். ஆனால் சில தருணங்களில் வீடுகள் கட்ட வேறு கட்டடங்களை உருவாக்க மரங்களைத் தறிக்கின்றோம். அவ்வாறான தருணங்களில் அவற்றிற்குப் பதிலாகப் புதிய மரங்களை நாட்டி விடுவது இன்றியமையாததாகும். நாம் பிறக்கும் போது எம்மைச் சுற்றியிருந்த மரங்களிலும் பார்க்கக் கூடிய அளவு மரங்களை நாங்கள் விட்டுச் செல்வது இன்றியமையாதது. நாட்டைச் சீர்ப்படுத்தல் கிராமத்தைச் சீர்ப்படுத்தல், வீட்டைச் சீர்ப்படுத்தல், என்ற வகையில் தொடர்ந்து உலகை நல்ல நிலையில் விட்டுச் செல்வதானால் மரங்களை நாட்டிச் செல்வது எமது கடமையாகும். பூடான் நாட்டில் எப்பொழுதுமே 72 சதவிகித காணி வனமாக இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். மரங்களின் அத்தியாவசியத்தை அவ்வூர் அரசர் நன்குணர்ந்து சேவையாற்றி வருகின்றார்.
யூத நாட்டுப் பழங் கதையொன்று ஞாபகத்திற்கு வருகின்றது.
ஒரு வயோதிபர் மரம் நடுவதை இளைஞர் ஒருவர் காண்கின்றார். ‘பெரியவரே! இந்த வயதில் இந்த மரத்தை நாட்டுகின்றீரே. அதன் பயனை நீர் பெறுவீரா?’ என்று இளம் வயதுடையவர்; வயது வந்தவரைக் கேட்கின்றார். ‘எனது பாட்டனார் நாட்டிய மரங்களின் பயனை நான் பெற்றுள்ளேன். எனது பேரப்பிள்ளைகளுக்காக நான் இந்த மரங்களை நாட்டுகின்றேன்’ என்றார் வயோதிபர். கதை அத்துடன் நின்றுவிடவில்லை. இளைஞர் அங்கிருந்த மரமொன்றின் அடியில் உறங்கப் போய்விடுகின்றார். எழுபது வருடங்கள் கழித்து எழுகின்றார். எழுந்து பார்த்தால் எவரையுமே அவருக்கு அடையாளந் தெரியவில்லை. ஒரே ஒரு பரீட்சயமான முகத்தைக் காண்கின்றார். அந்த இளம் மனிதர் மரங்கள் நட்டுக் கொண்டிருக்கின்றார். அவரிடம் இப்போது வயோதிபர் ஆகியிருக்கும் முன்னைய இளைஞர் ‘என்ன நடந்தது? எனக்குத் தெரிந்த எல்லோரும் எங்கே,?’ என்று கேட்கின்றார். அந்த இளைஞனுக்கு இவரைத் தெரியவில்லை. ‘யார் நீ?’ என்று கேட்கின்றான். அப்போது தான் தெரிந்தது அந்த மரங்களை அப்போது நாட்டிக் கொண்டிருந்தவர் முன்பிருந்த வயோதிபரின் பேரனார் என்பது. மரங்கள் நாட்டாது தான் வாழ்ந்ததையும் பரம்பரை பரம்பரையாக அந்த இளைஞனின் வம்சாவழியினர் மரங்கள் நாட்டி உலகத்தைக் காத்து வந்துள்ளதையுங் கண்டு வெட்கப்படுகின்றார் அந்த நித்திரை விட்டு எழுந்த மனிதர். நமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதே வாழ்க்கை என்பதை உணர்கின்றார் அந்த மனிதர். அந்த யூத கதையின் சாராம்சம் என்னவெனில் நாம் எமக்கென வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றோம். மரம் நாட்டுபவன் வருங்காலச் சந்ததியினரையும் வாழவைக்க வாழ்கின்றான் என்பதே. எனவே மரம் நாட்டுவது எமது நாட்டைக் காக்கும் புனிதக் கடமையாகின்றது. வனாந்தரமாக இருந்த யூத தேசத்தில் யூத தேசிய நிதி என்றொன்றை 1901ம் ஆண்டில் அமைத்து மரம் வளராத இடங்களிலும் மரங்களை வளர்த்து வந்துள்ளார்கள் அம் மக்கள். 20ம் நூற்றாண்டு இறுதியில் கணக்குப் பார்த்ததில் சென்ற நூண்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மரங்களின் எண்ணிக்கையை விட கூடிய மரங்களை இறுதியில் கொண்டிருந்த ஒரே நாடு இஸ்ரேலிய தேசமே என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மரங்களை நடுவது வெறும் சூழல் பாதுகாப்புக்கு மட்டுமன்று. எமது தேசத்தை, நாட்டை, பாரம்பரியத்தைக் கட்டி எழுப்ப மரங்கள் உறுதுணையாக அமைகின்றன. மக்களைச் சுபீட்சமுடன் வாழ, வளர வழிவகுக்கின்றன மரங்கள். மரங்கள் மனிதர்களின் மாண்பு பெறும் நண்பர்கள். அவற்றை நாட்டிப் பயன் பெறுவோம்.
‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ என்று கூறி என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி எனது சிற்றுரையை இத்துடன் முடிவுறுத்துகின்றேன். நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.