மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கருடன் நேற்று இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி நிலைமை குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் மற்றும் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அத்துமீறி எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பதிலடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விரிவாக மத்திய அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடுப் பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடத்திய பீரங்கி தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.