இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர இன்று அவரை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே ஆரம்பித்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்திய முதலீடுகள் காரணமாக பிரிட்டன் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், இந்தியா – பிரிட்டன் இடையே சிறந்த நட்புறவு உள்ளது எனவும் தெரிவித்தார்.
தொழில் நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் என்பது உலகளாவியது, ஆனால் தொழில் நுட்பம் உள்ளூர்வாசிகளுக்கானது. இந்த இரண்டையும் இணைக்கவே இந்த மாநாடு நடைபெறுகிறது. இது இரு நாடுகளுக்குமிடையே மிகப்பெரிய வாய்ப்பு என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் நீங்கள் எங்களின் மாபெரும் நண்பர் என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவைப் பார்த்து தெரிவித்தார். தொழில் நுட்ப மாநாட்டுக்குப் பின்னர் இன்று பிற்பகலில், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். விசா விதிமுறைகளை இங்கிலாந்து கடுமையாக்கி இருப்பதால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தெரசா மேயிடம் இப்பிரச்சினை எழுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுவார்கள். முன்னதாக இந்திய வருகை தொடர்பாக லண்டன் நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த தெரசா மே, பிரிட்டனின் மிகவும் முக்கியமான மற்றும் நெருக்கமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. இந்த இரு நாடுகளும் தங்களது உறவை மேலும், மேலும் ஆழமாக வளப்படுத்து கொள்ளும் தன்மை உடையது. அதனால் தான் ஐரோப்பியாவை தாண்டி பிரதமராக எனது முதல் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள விரும்பினேன் என குறிப்பிட்டிருந்தார்.