148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வடமாகான சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்து உள்ளார்.வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வவுனியா நகர சபை செயலாளர் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்து ஊழல் செய்துள்ளதாக சபையில் விவாதிக்கப்பட்டது. அதன் போதே எதிர்க்கட்சி தலைவர் அவ்வாறு கூறினார்.
மேலும் கூறுகையில்,
அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்வது மாத்திரம் போதாது. அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே ஏனையவர்களுக்கு பயம் வரும் என தெரிவித்தார்.
பதவி நீக்கிவிட்டேன். – சி.வி.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் , வவுனியா நகர சபை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என தெரிவித்தார்.
ஊழல்களுக்கு அமைச்சரே பொறுப்பு. – அஸ்மீன்.
அமைச்சுக்கு கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் துறை சார் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகளுக்கு , உரிய அமைச்சுக்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். அவற்றை அதிகாரிகள் மீது சுமத்தி விட்டு அமைச்சுக்கள் தப்பிக்க முடியாது. பொறுப்புக்கூற வேண்டிய கடமை ஒவ்வொரு அமைச்சின் அமைச்சர்களுக்கும் உண்டு. என ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்தார்.
ஊழல் என தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்தேன். – சி.வி.
இந்த ஊழல் குறித்து எனக்கு தெரியப்படுத்திய உடன் நடவடிக்கை எடுத்தேன். எனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. என முதலமைச்சர் தெரிவித்தார்.
எங்கும் ஊழல். – பசுபதிப்பிள்ளை.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டு உள்ளது. அதேபோன்று பிரதேச சபைக்கு முன்பாக கட்டப்பட்டு உள்ள சதொச கட்டடமும் அனுமதி பெறப்படவில்லை. ஊழல் வடமாகாணத்தில் எங்கும் நடைபெறுகின்றது. என தெரிவித்தார்.
கட்டட அனுமதி கொடுக்க தகுதியற்றவர், அனுமதி கொடுக்கிறார். – தவராசா.
நல்லூர் பிரதேச சபையில் கட்டட அனுமதி கொடுக்கும் நபர் , கட்டட அனுமதி கொடுக்க தகுதியற்றவர் என்பது தற்போது கண்டரியபப்ட்டு உள்ளது.அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மாநகர சபையில் முறைகேடு. சுகிர்தன்.
யாழ்.மாநகர சபையில் ஊழல்கள் நடைபெற்று உள்ளன என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சு.சுகிர்தன் தெரிவித்தார். அதன் போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் ஊழல் என எதனை வைத்து சொல்கிறீர் என கேள்வி எழுப்பினார்.
அதனை அடுத்து சுகிர்தன் , ஊழல் எனும் சொல்லை தாம் வாபஸ் வாங்குகிறேன் எனவும் , மாநகர சபையில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் தனது ஆசனத்தில் அமர்ந்தார்.
ஊழல் என்றால் என்ன ? முறைகேடு என்றால் என்ன ? சிவநேசன்.
ஊழல் மற்றும் முறைகேடு இவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன ? இவற்றுக்கு வரைவிலக்கணம் சொல்லுங்கள். என ஆளும் கட்சி உறுப்பினர் சி.சிவநேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனை தொடர்ந்து சபையில் சில நிமிடம் அமைதி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஊழல் என்றால் ஊழல் முறைகேடு என்றால் முறைகேடு என சிரித்துக்கொண்டு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
Spread the love