அரசியல் இலங்கை கட்டுரைகள்

தெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன்

clear

மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இருந்தபோதிலும், புதிய அரசியலமைப்பின் முதலாவதும் முக்கிய விடயமுமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைப்பது என்ற விடயத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. 

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் மூன்று விடயங்களில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்படுகின்றது. ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகார முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பிரதமரின் தலைமையிலான நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதென்;பது முதலாவது விடயமாகும். 

தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையை – விகிதாசாரம் மற்றும் தொகுதி தேர்தல் முறை என இரண்டையும் கலந்ததொரு கலப்பு தேர்தல் முறைமையாக மாற்றியமைப்பது இரண்டாவது விடயமாகும்.  இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதென்பது மூன்றாவது விடயமாகும். 

இவற்றில்> புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவது பற்றியும்> இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் பகிரங்கமாக பலராலும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. 

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் விரும்புகின்ற சமஸ்டி அரசியல் முறைமை குறித்து அழுத்தமான எதிர்க்கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன.  குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் இணைப்பது> ஒற்றையாட்சி முறைமைக்குப் பதிலாக சமஸ்டி ஆட்சி முறையில் இறைமையுள்ள வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்ற இரண்டு அம்சங்களும் சிக்கல்கள் நிறைந்ததாகவும் நேரெதிர் முரண்பாட்டு நிலைமைகளைக் கொண்டதாகவும் திகழ்கின்றன.

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதில் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களத் தரப்பில் இருந்து மட்டுமல்லாமல்> இந்தப் பிரதேசங்களைத் தமது தாயகப் பகுதிகளாகக் கொண்டுள்ள சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் தரப்பிலும் உடன்பாடு இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. 

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்திருப்பதைக் காண முடிகின்றது. 

மக்கள் கருத்தறியும் குழுவின் முரண்பாடான நிலைப்பாடு 

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவும் தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி முறையே தொடர வேண்டும்.  நிர்வாகச் செயற்பாடுகளுக்கான 9 மாகாணங்கள் என்ற கட்டமைப்பே போதும். அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதில்லை. மத்திய அரசாங்கத்திடமே அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவி;க்கப்பட்டிருக்கின்றது.

 

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது> இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார். வடபகுதி மக்கள் சமஸ்டி முறையில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அங்குள்ள அரசியல்வாதிகளே சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்று வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள் என அவர் தெரிவித்திருந்தார். 

இந்தக் கூற்றை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும்> அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழு உறுப்பினருமாகிய தவராசா மறுத்துரைத்திருந்தார். மக்கள் கருத்தறியும் அமர்வுகள் பலவற்றில் கலந்து கொண்டு, தமிழ் மக்களின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்திருக்கின்றார். தமிழ் மக்கள் சமஸ்டி முறையையே தங்கள் கருத்துக்களில் வலியுறுத்தியிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். 

குழுவின் தலைவர் தெரிவித்த கருத்து பிழையானது. உண்மைக்கு மாறானது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.தற்போது நடைமுறையில் உள்ள ஒன்பது மாகாணங்கள் என்ற நிர்வாகக் கட்டமைப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் தொடர்ந்து நிலவ வேண்டும் என்று அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரைத்திருப்பதாக இந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில் அந்தக் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். 

ஒற்றையாட்சியின் கீழ் மத்திய அரசாங்கத்திடமே அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்திருக்கின்றது.  அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பிரச்சினைக்குரிய விடயமாக வெளிப்பட்டிருக்கின்றது என்றார் லால் விஜேநாயக்க.

 

அரசியல் தீர்வு தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களில் இது போன்று பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தொகுதிவாரியான தேர்தல் முறைமையொன்று வருமேயானால்> அது சிறுபான்மையினத்தவரைப் பெரிதும் பாதிக்கும் என்று சிறுபான்மை அரசியல் கட்சிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன. 

அதேவேளை  சிறிய அரசியல் கட்சிகளும் தொகுதிவாரியான தேர்தல் முறைமையில் தமது அரசியல் பலத்தை இழந்து போக நேரிடும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. 

அது மட்டுமல்ல. தொகுதிவாரியானதும் விகிதாசார முறையிலானதும் தேர்தல் முறைமை நாட்டின் எந்தெந்த தேர்தல் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதைத் தீர்மானிப்பதிலும் பல சிக்கல்கள் இருப்பதாக அந்தக் கட்சிகளும் சிறுபான்மையின அரசியல் தலைவர்களும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். 

ஆயினும் இந்த அளவுக்கு புதிய அரசியலமைப்பின் முதலாவது விடயமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் குறைப்பது என்ற விடயப்பரப்பில் பேசப்படவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. இந்த விடயம் குறித்து, ஆழமாகச் சிந்திக்கப்பட்டிருப்பதாகவோ> ஆழமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவோ தெரியவில்லை. 

நிறைவேற்று அதிகாரத்தை ஏன் குறைக்க வேண்டும்?

இலங்கை ஜனாதிபதி ஆட்சி முறையின் பிதாமகராகிய ஜே.ஆர்.ஜயவர்தன அதிகாரத்தில் இருந்தபோது தனக்கிருந்த அபிரிமிதமான பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகார பலத்தை வழங்கியிருந்தார். 

அது மட்டுமல்லாமல்> ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவர்> நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். ஜனாதிபதியாகப் பதவி வகிக்கின்ற ஒரு தனி மனிதன்> அவர் பதவியில் இருந்தாலும் சரி> பதவியில் இருந்து வெளியேறியிருந்தாலும்சரி> (அதாவது முன்னாள் ஜனாதிபதி என்ற சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும்சரி) பதவியில் இருந்த காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த அல்லது அவருடைய தீர்மானத்திற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விடயங்களில் குறைகள் எற்பட்டிருந்தாலும்> ஊழல்கள் மலிந்திருந்தாலும்கூட> அவரை கேள்விக்கு உட்படுத்த முடியாது. 

அவருடைய செயற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் ஊடாகக் கூட அவரிடம் கேள்வி கேட்க முடியாது.இதன் காரணமாகத்தான் இலங்கையில் ஜனாதிபதியினால் இறந்தவர்களை மட்டும்தான் உயிர்ப்பிக்க முடியாது. ஏனைய அனைத்து விடயங்களையும் அவரால் செய்ய முடியும் என கூறப்படுகின்றது. 

அந்த அளவுக்குக் காரியங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களைக் கொண்ட அதிகார பலம் அவருக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இந்த அதிகார பலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும்> நாட்டு மக்கள் அனைவரினதும் நலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில்; ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களுக்கு மேலதிகமாக மேலும் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியலமைப்பில் 18 ஆவது திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தார்.

 

ஜனாதிபதி என்ற தனி மனிதன் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரப் பலமானது> சுதந்திரமாகச் செயற்பட வேண்டிய நீதித்துறை, சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான பொலிஸ் நிர்வாகத்துறை> மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு> தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் திணைக்களக் கட்டமைப்பு போன்ற விடயங்களைத் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முடியாத வகையில் அவற்றுக்கான ஆணைக்குழுக்களை நியமிக்கின்ற அதிகாரத்தில் சில வரைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. 

இந்த வரைமுறைகள் மக்களால் நேரடியாக ஒரு தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதியானாலும்> ஜனநாயக விழுமியங்களை மீறி அவர் செயற்பட முடியாதவாறு அரணாக உருவாக்கப்பட்டிருந்தன.  ஆனால்> இந்த வரைமுறைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 18 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உடைத்தெறிந்து> அந்த அதிகாரங்களைத் தன் வசப்படுத்திக்கொண்டார். 

நீதித்துறை> மனித உரிமைகள் செயற்பாட்டுத்துறை,  தேர்தல் திணைக்களம்,  பொலிஸ் துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்குப் பொறுப்பான தனித்தனி ஆணைக்குழுக்களுக்கான ஆட்களை அவரே தன்னிச்சையாக நியமிப்பதற்கான அதிகார பலத்தை இதன் மூலம் அவர் பெற்றுக் கொண்டார். 

இதனால் அரசியல் தலையீடின்றி சுதந்திரமாகச் செயற்பட வேண்டிய முக்கியமான ஜனநாயகக் கட்டமைப்புக்கள் அரசியல் ரீதியாக ஊழல்கள் மலிந்ததாக மாறிப்போயின.  பொதுமக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிறைவேற்று அதிகாரப் பலமானது> ஊழல் புரிவதற்காகவும், ஜனாதிபதி பதவியை வகித்த தனிமனிதனுடைய குடும்பத்தினரும்> சுற்றம் சூழ்ந்த உறவுகளுக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவரால் பயன்படுத்தப்பட்டது. 

ஒன்றையொன்று முட்டிக்கொள்ளாமல்> சமாந்தரமாகவும்> சுதந்திரமாகவும் ஜனநாயக முறைமையிலும் செயற்பட வேண்டிய நீதித்துறை, சட்டவாக்கத்துற, ஜனாதிபதி என்ற நிறைவேற்றுத் துறை என்பன முறையான கட்டமைப்புக்கள் அற்றவையாக மாறிப்போயின.

 

நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தி, தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , நீதித்துறையைத் தனது சுண்டுவிரலில் வைத்து ஆட்டிப்படைத்து, தேர்தல் முறைகளில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சீரழிவுகளை ஏற்படுத்தி> சர்வாதிகாரப் போக்கை மேற்கொண்டிருந்தார். 

அத்துடன்> நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வாழ்நாள் முழுதும் செயற்படத்தக்க வகையில் ஜனாதிபதி தேர்தலில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற வசதியை அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டார். 

இதன் காரணமாகவே> ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்க வேண்டும். அந்த அதிகாரங்களை பிரதமர் தலைமையிலான நாடாளுமன்றம் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையிலான மாற்றத்தை புதிய அரசியலமைப்பில்  கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

 

நாடாளுமன்றத்தைப் பலப்படுத்துவது நல்லாட்சிக்கு வழிவகுக்குமா?

இந்த நாட்டின் முதலாவது ஜனாதிபதிக்குப் பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையற்ற அதிகாரங்களைக் குறைக்கப் போவதாகவும்> ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்திருந்த போதிலும் எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,  ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்போவதாகக் கூறி> ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.  

ஆனால்> மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற பேராசையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்திய மகிந்த ராஜபக்சவை அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன> தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்கு அமைவாக ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக> வேறு விடயங்களையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். 

அளவற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்ததன் காரணமாகவே,  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய ஆட்சியில் ஊழல்கள் மலிந்திருந்தன.  அதிகாரத் துஸ்பிரயோகம்> சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் ரீதியாகவும்> மத ரீதியாகவும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன என்பது போன்ற காரணங்களுக்காகவே, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை இல்லாமற் செய்து பிரதமருடைய அதிகாரங்களை அதிகரித்து> நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பு கூறத்தக்க ஒருவராக மாற்றுவதற்காகப் புதிய அரசியலமைப்பில் அம்சங்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த மாற்றங்களின் ஊடாக மட்டும் நாட்டில் நல்லாட்சிக்கான உருவாக்கிவிட முடியுமா என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.  இலங்கையைப் பொறுத்தமட்டில் அதன் அரசியலமைப்பில் நல்லாட்சிக்கான> சட்டங்கள் சட்ட விதிமுறைகள் பல உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 

ஆனாலும்> அவற்றை முழுமையாக – மக்களுக்குப் பயன்படத்தக்க வகையில் நடைமுறைப்படுத்தத்தக்க வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பது சட்டத்துறை நிபுணர்களின் கருத்தாகும்.  ஒன்றையொன்று மேவத்தக்க வகையிலான முரண்பாடான சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். 

சட்டவிதிகளில் காணப்படுகின்ற முரண்பாடான நிலைமைகளினால்> பல முக்கிய விடயங்களில் சரியான முறையில் செயற்படுவது கடினமான காரியமாகியுள்ளது. சிக்கல் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. என்று அவர்கள் குறி;ப்பிடுகின்றார்கள்.  எனவே அரசியலமைப்புச் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தல் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

 

தெளிவான வரையறைகள் அவசியம்

ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை ஆகிய மூன்றும் தெளிவான வரையறைகளைக் கொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும்.  அதிகாரங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து அவற்றைச் சரியான முறையில் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு இந்த வரையறைகள் அவசியமாகின்றன. 

இந்த மூன்று துறைகளும்;> சுதந்திரமாகவும் அதேவேளை,  ஒன்றுக்கொன்று உதவியாகவும்> ஆட்சியை சரியான முறையில் வழிநடத்திச் செல்லவும் இந்த வரையறைகள் உதவுகின்றன.  இந்த வரையறைகளை மிஞ்சியதாக ஜனாதிபதியின் தலைமையிலான நிறைவேற்றுத்துறை அதிகார வலுப்பெற்றிருப்பதே பல்வேறு சிக்கல்களுக்கும் ஊழல்கள் மோசடிகளுக்கும்> அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் வழி வகுத்திருக்கின்றன. 

எனவே> அரசியல் சுய நலப் போக்கைக் கொண்ட ஒருவரினால்> நிறைவேற்றுத்துறையின் அளவற்ற அதிகாரப் பலம் துஸ்பிரயோகத்திற்கும் ஊழல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற காரணத்திற்காக அந்த நிறைவேற்றுத்துறையையே பலமிழக்கச் செய்வது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. 

ஜனாதிபதி என்ற நிறைவேற்றுத் துறையின் அதிகாரச் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட முடியாதவையாக மாற்றப்பட்டதன் காரணமாகவே> ஜனாதிபதி ஆட்சிமுறைமையில் மாற்றம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 

பௌத்த மதவாதமும்> சிங்களப் பேரினவாதமுமே இலங்கை அரசியலில் கோலோச்சுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே அனைத்துக் காரியங்களும் இறுதி வடிவம் பெறுகின்றன.  இறுதி முடிவுகளும் இவற்றை மையப்படுத்தியதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த நிலையில் ஒரு தனி மனிதனுடைய ஆளுமை> தேசிய ரீதியிலான சிந்தனை மற்றும் செயற்பாட்டு வல்லமை என்பவற்றுக்கு களம் அமைத்துள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றம் செய்து நாடாளுமன்றத்தைப் பலப்படுத்துவதன் ஊடாக> தேசிய அரசியலில் தீர்க்கமான வழிநடத்தலுக்கு வழி பிறக்குமா என்பது சந்தேகமே.  

சிங்கள மேலாதிக்கக் கடும்போக்கும் பௌத்த மேலதிக்க கடும்போக்கும் அரசியல் செல்வாக்கைப் பிரயோகிப்பதற்கான களமாகவே நாடாளுமன்றம் காணப்படுகின்றது.  அது மட்டுமல்லாமல் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத மதவாத பிரசாரங்களினதும்> வழிநடத்தல்களிலுமே நாடாளுமன்றத் தேர்தல்களின் வெற்றி தோல்வி என்பவற்றை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன

மேலோங்குகின்ற இனவாத செல்வாக்கின் அடிப்படையிலேயே ஆட்சிகள் அமைக்கப்படுவதும் இந்த நாட்டின் அரசியல் மரபாக இருந்து வருகின்றது.  இந்த நிலைமையில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை> பிரதமரின் வழிநடத்தலின் கீழ் பலப்படுத்துவதென்பது> சிறுபான்மை இன மக்களுக்கு மேலும் மேலும் கஸ்டங்களையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்ற அரசியல் கட்டமைப்பாகவே உருவாகும் என்பதில் ஐயமில்லை. 

அது மட்டுமல்லாமல்> சிறுபான்னை இன மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறைகளும்> இன ரீதியான ஒடுக்குமுறையும் இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி> ஜனநாயகத்தின் கேள்விக்கு உட்படுத்த முடியாத பெரும்பான்மை பலத்தின் தீர்மானம் என்ற போர்வைக்குள் மேற்கொள்வதற்கு வசதியாகப் போய்விடும் என்று கருதுவதற்கும் இடமுண்டு.

எனவே, நீதித்துறை.சட்டத்துறை மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகிய மூன்றும் தனித்தனியே தன்னளவில் சவாலுக்கு உட்படுத்த முடியாத பலத்தோடு செயற்படத்தக்கவைகளாக உருவாக்கப்பட வேண்டும். 

இது கட்டுப்பாடுகளை மீறாத வகையில் ஒன்றுக்கொன்று வழிநடத்துபவையாகவும், நல்லாட்சிக்கு உறுதுணை புரிவதாகவும் அமையவும் வேண்டும்.

அது மட்டுமல்லாமல் தண்டனைகளில் இருந்து விலக்களிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர்> பொறுப்பு கூறும் தன்மை கொண்டவராகவும்> குறிப்பிட்டதொரு மட்டத்தில் நீதி விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியவராகவும்> நீதி விசாரணைகளில் குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுபவராகவும் தற்போதைய ஜனாதிபதி முறைமை அல்லது நாட்டின் நிறைவேற்றுத் துறை மாற்றியமைக்கப்பட வேண்டும். 

அதன் ஊடாகவே நாடு நன்மையடையக் கூடியதாக இருக்கும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply